திருநெல்வேலி மாவட்டத்தில், கடந்த சில தினங்களாக பெய்து வரும் கனமழை காரணமாக, பல்வேறு இடங்களில் மழைநீர் தேங்கி, பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன. இந்த இடங்களையும், நெல்லை சந்திப்பு பெரியார் பேருந்து நிலையத்தில் தேங்கிநிற்கும் மழை நீரை, இயந்திரத்தின் மூலம் வெளியேற்றும் பணிகளையும், தமிழக சபாநாயகர் மு.அப்பாவு, திருநெல்வேலி மாவட்ட கண்காணிப்பு அலுவலரும், தமிழ்நாடு தொழில் வளர்ச்சிக் கழக மேலாண்மை இயக்குநருமான சந்தீப் நந்தூரி, நகராட்சி நிர்வாக இயக்குநர் சிவராசு, மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் கா.ப. கார்த்திகேயன், நெல்லை மாநகராட்சி ஆணையாளர் என்.ஓ.சுகபுத்ரா ஆகியோருடன், திருநெல்வேலி மாவட்டத்துக்கான பொறுப்பு அமைச்சரும், தமிழக நகராட்சி நிர்வாகம் மற்றும் வழங்கல்துறை அமைச்சருமான கே.என்.நேரு, நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது, ஆக்கிரமிப்புகளை உடனுக்குடன் அகற்றி, சீராக நீர் செல்வதை, மாவட்ட அலுவலர்கள் உறுதி செய்ய வேண்டும்! என்று, அறிவுறுத்தினார். வெள்ளம் தொடர்பான அனைத்துப் பணிகளையும், விரைந்து மேற்கொள்ளுமாறு, தறைசார்ந்த அலுவலர்களிடம், அமைச்சர் நேரு, கேட்டுக் கொண்டார். தொடர்ந்து பேசிய, அமைச்சர் நேரு, ” பருவமழை பெய்யும் காலங்களில் எல்லாம், மழைநீர் தேங்கி நிற்கும் நெல்லை பெரியார் பேருந்து நிலையத்தில், நிரந்தரமாக வெள்ளநீர் வராமல் தடுக்கும் பொருட்டு, மழைநீர் கால்வாய் அமைக்க 5 கோடி ரூபாய், நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அந்த தொகையைக் கொண்டு, போர்க்கால அடிப்படையில், பணிகளைத் துவக்கிடுமாறு, அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. மாவட்டம் முழுவதும், நீர்நிலைகள், கழிவுநீர் ஓடைகள், நீர் வருகின்ற. வழித்தடங்கள் போன்றவற்றில், ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளன.
மாநில பேரிடர் மீட்பு படையினரும், 6 படகுகளுடன் 50 தன்னார்வ மீட்பு படையினரும், தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளனர். ஆங்காங்கே, தேங்கிநிற்கும் மழைநீரை, வெளியேற்றும் பணிகளில், 20 ராட்சத மின் மோட்டர்கள், ஈடுபடுத்தப்பட்டுள்ளன. சேதமடைந்துள்ள நெற்பயிர்கள், வாழைப்பயிர்கள், பயறு வகைகள், முழுமையாக அல்லது பகுதி அளவில் இடிந்து போயுள்ள வீடுகள், இறந்து போயுள்ள கால்நடைகள் போன்றவை குறித்த, கணக்கு எடுக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன!”- இவ்வாறு அமைச்சர் நேரு, கூறினார். தொடர்ந்து சீவலப்பேரியில் மழை வெள்ளத்தில் மூழ்கியுள்ள, தாமிரபரணி ஆற்றுப்பாலத்தை, அமைச்சர் நேரு, பார்வையிட்டார். இந்த நிகழ்வுகள் அனைத்திலும், பாளையங்கோட்டை தொகுதி சட்டமன்ற உறுப்பினர் மு.அப்துல் வகாப், முன்னாள் அமைச்சர் டி.பி.எம்.மைதீன் கான், முன்னாள் சபாநாயகர் இரா. ஆவுடையப்பன், நெல்லை மாநகராட்சி மேயர் கோ.ராம கிருஷ்ணன், துணை மேயர் கே.ஆர். ராஜூ ஆகியோரும், கலந்து கொண்டனர்.
திருநெல்வேலி மாவட்ட செய்தியாளர் “மேலப்பாளையம்” ஹஸன்