திருநெல்வேலி,நவ.22:-
நெல்லை கொக்கிரகுளம் பகுதியில் உள்ள மாவட்ட ஆட்சியர் வளாகத்தில், இன்று (நவம்பர்.22) காலையில் நடைபெற்ற எளிய நிகழ்ச்சி ஒன்றில், இம்மாவட்டத்தில் உள்ள கடலோர கிராமங்களான, ராதாபுரம் ஊராட்சி ஒன்றியம், விஜயாபதி ஊராட்சி “தோமையர் புரம்” மீனவ சங்கத்தினருக்கும், வள்ளியூர் ஊராட்சி ஒன்றியம், செட்டிகுளம் ஊராட்சி, “பெருமணல்” மீனவ சங்கத்தினருக்கும், தலா 14 லட்சத்து 30 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான 2 டிராக்டர்களை, திருநெல்வேலி “நாடாளுமன்ற உறுப்பினர்” வழக்கறிஞர் செ. ராபர்ட் புரூஸ் முன்னிலையில், “மாவட்ட ஆட்சித்தலைவர்” டாக்டர் இரா. சுகுமார், வழங்கினார்.

கனிமம் மற்றும் சுரங்க நிதியின் கீழ் வழங்கப்படடுள்ள இந்த டிராக்டர்கள், கடலுக்கு மீனவர்கள் மீன்பிடிக்க செல்லும் போது, அவர்களுடைய படகுகளை கடலுக்குள் தள்ளி விடுவதற்கும், அதுபோல மீன்பிடித்துவிட்டு, கரைக்கு திரும்பி வரும்போது, படகுகளை கடலில் இருந்து, கரைக்கு இழுத்து விடுவதற்கும், பயன்படுத்தப்படும். மீனவ சங்க உறுப்பினர்களின் பயன்பாட்டிற்காக, இந்த டிராக்டர்கள் பயன்படுத்தப்பட்டு, அதன் மூலம் கிடைத்திடும் வருமானம், டிராக்டர்களை பராமரிக்கவும், மீனவ சங்கங்களின் வளரச்சிக்கு, சேமிப்புகளை உருவாக்கவும் பயன்படுத்தப்படும்.
இந்த நிகழ்ச்சியில், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் திட்ட இயக்குநர் ந. சரவணன் மற்றும் மீனவர் சங்கங்களின் பிரதிநிதிகள், மீனவர்கள் கலந்து கொண்டனர்.
திருநெல்வேலி மாவட்ட செய்தியாளர்: “மேலப்பாளையம்” ஹஸன்.
