நாகர்கோவில், அக்.28,
சிறுபான்மை சமூக தொழில்களுக்கு எதிராக செயல்படுவதாகக் குற்றம்சாட்டி, நாகர்கோவில் மாசுக்கட்டுப்பாட்டு வாரிய அலுவலகம் முன்பு இன்று காலை 10.30 மணியளவில், நாகர்கோவில் மாநகர் மாவட்ட விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பாக மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
நாகர்கோவிலில் சிறுபான்மை சமூகத்தவரால் நடத்தப்படும் தொழில் நிறுவனங்களின் மின்சாரத்தை எந்தவித முன்னறிவிப்புமின்றி துண்டித்தது, கடுமையான சட்ட மீறல் என்றும், இது சிறுபான்மை சமூகத்தை இலக்காகக் கொண்ட திட்டமிட்ட தாக்குதலாகும் என்றும் கட்சித் தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்தனர்.
அல் காலித் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில், மாநகர மாவட்ட செயலாளர் அல் காலித், தென் மண்டல துணைச் செயலாளர் பாஸ்கர் பகலவன், பொறியாளர் அணி மாநில துணைச் செயலாளர் ஸ்டெர்லின் பாக்கியதாஸ், கருத்தியல் பரப்புரை மாநில துணைச் செயலாளர் கோட்டார் யூசுப், மகளிர் விடுதலை இயக்க மாவட்ட செயலாளர் ராணி மணிகண்டன், தெற்கு மண்டல பகுதி செயலாளர் சதீஷ் பாபு, ஊடக ஒருங்கிணைப்பாளர் தொல்காப்பியன், இளஞ்சிறுத்தை எழுச்சி பாசறை மாவட்ட துணை அமைப்பாளர் யாசர் அராபத், இஸ்லாமிய ஜனநாயகப் பேரவை மாவட்ட அமைப்பாளர் முஜீப் ரஹ்மான், ரெட் ஸ்டார் மாவட்ட செயலாளர் மணவை கண்ணன், மற்றும் பலர் கலந்து கொண்டு உற்சாகமாகக் கோஷங்கள் எழுப்பினர்.
நீதிமன்ற வழக்குகள் நிலுவையில் இருந்தும் அதிகாரிகள் சட்டத்தை மீறி மின்சாரத்தை துண்டித்தது “திராவிட மாடல் ஆட்சியின்” பெயரில் மக்களை கொதிநிலைக்கு தள்ளும் நடவடிக்கையாகும் என அவர்கள் தெரிவித்தனர்.
சிறுபான்மை சமூகத்தின் உரிமைகளை காக்கவும், அரசு அதிகாரிகளின் அநீதிக்கு முற்றுப்புள்ளி வைக்கவும் அனைவரும் ஒன்றுபட்டு குரல் கொடுக்க வேண்டும் என ஆர்ப்பாட்டக்காரர்கள் வலியுறுத்தினர்.
தமிழக விடியல் செய்திகளுக்காக கேமராமேன் ஜெனீருடன் குமரி மாவட்ட தலைமை நிருபர் பாவலர் ரியாஸ்.
