கன்னியாகுமரி, பிப் 4:
கன்னியாகுமரி மாவட்டம், பத்மநாபபுரம் தொகுதிக்குட்பட்ட குமாரகோவில் ஊராட்சியில் பொதுமக்களின் அத்தியாவசியத் தேவைக்காகக் கட்டப்பட்ட சமூகக் கழிப்பிடம், தற்போது முறையான பராமரிப்பின்றி முற்றிலும் சிதிலமடைந்து காணப்படுகிறது.

கடந்த 2015-2016 ஆம் ஆண்டு தூய்மை இந்தியா திட்டத்தின் (Swachh Bharat Mission) கீழ் சுமார் 4 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் இது கட்டப்பட்டது.
பயன்பாட்டிற்கு வந்த சில காலத்திலேயே முறையான பராமரிப்பு இல்லாத காரணத்தால், தற்போது இந்தக் கழிப்பிடம் கடும் சேதமடைந்து பொதுமக்கள் பயன்படுத்த முடியாத நிலையில் கைவிடப்பட்டுள்ளது.
இது பொதுமக்களின் வரிப்பணத்தை வீணடிக்கும் செயலாக இருப்பதாக சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
குமாரகோவில் பகுதியில் கழிப்பிடம் மட்டுமல்லாது, உட்புறச் சாலைகள் சேதமடைந்தும், பயணிகள் நிழற்குடைகள் பராமரிப்பற்றும் காணப்படுகின்றன.
குடிநீர் வசதி போன்ற அடிப்படை உள்கட்டமைப்புகளும் கேள்விக்குறியாகவே உள்ளது. “ஆட்சியாளர்கள் மற்றும் அதிகாரிகள் முக்கியப் பகுதிகளின் கட்டமைப்புகளில் மட்டுமே கவனம் செலுத்துகிறார்களா?” என்ற ஆதங்கம் இப்பகுதி மக்களிடையே எழுந்துள்ளது.
தற்போது இத்தொகுதி தமிழக தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் திரு. மனோ தங்கராஜ் அவர்களின் கட்டுப்பாட்டில் உள்ளது குறிப்பிடத்தக்கது.
“பொதுமக்களின் வரிப்பணத்தில் கட்டப்பட்ட இந்தத் திட்டம், பராமரிப்பின்றி பாழாவதற்காகவே உருவாக்கப்பட்டதா?” என மக்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.
எனவே, மாவட்ட நிர்வாகம் மற்றும் சம்பந்தப்பட்ட துறையினர் உடனடியாகத் தலையிட்டு, இந்தச் சமூகக் கழிப்பிடத்தைப் புனரமைத்து மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டுமெனக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
தமிழக விடியல் செய்திகளுக்காக, கேமராமேன் ஜெனீருடன், பாவலர் ரியாஸ்.
