Headlines

நெல் கொள்முதல் நிலையங்களில் வியாபாரிகளுக்கு முன்னுரிமை மற்றும் லஞ்சப் புகார்: மாவட்ட ஆட்சியர் திடீர் ஆய்வு செய்ய சிறு விவசாயிகள் கோரிக்கை..!

நெல் கொள்முதல் நிலையங்களில் வியாபாரிகளுக்கு முன்னுரிமை மற்றும் லஞ்சப் புகார்: மாவட்ட ஆட்சியர் திடீர் ஆய்வு செய்ய சிறு விவசாயிகள் கோரிக்கை..!

கன்னியாகுமரி மாவட்டம் தோவாளை வட்டத்தில் கும்பப்பூ நெல் அறுவடைப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில், அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் (DPC) சிறு விவசாயிகள் பெரும் பாதிப்பைச் சந்தித்து வருகின்றனர்.

செண்பகராமன்புதூர், திட்டுவிளை, அந்தரபுரம், கடுக்கரை ஆகிய பகுதிகளில் அமைக்கப்பட்டுள்ள இந்த மையங்களில், ஒவ்வொரு மூடை நெல்லுக்கும் அளவு கூலியாக ரூ. 30 மற்றும் லஞ்சமாக ரூ. 32 என விவசாயிகளிடம் கட்டாய வசூல் செய்யப்படுகிறது.

இந்தத் தொகையைக் கொடுக்க விவசாயிகள் தயாராக இருந்தாலும், உள்ளூர் வியாபாரிகள் கொண்டுவரும் நெல்லுக்கே முன்னுரிமை அளிக்கப்பட்டு உடனடியாகக் கொள்முதல் செய்யப்படுகிறது.

இதனால் கொள்முதல் நிலையங்களில் எப்போதும் வியாபாரிகளின் நெல் மூட்டைகளே ஆக்கிரமித்துள்ளதால், இடப்பற்றாக்குறையால் சிறு விவசாயிகள் தாங்கள் கொண்டுவரும் நெல்லைக் கொட்ட முடியாமல் மீண்டும் அதே வியாபாரிகளிடமே சொற்ப விலைக்கு விற்க வேண்டிய அவல நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.

மேலும், திட்டுவிளை மற்றும் அந்தரபுரம் ஆகிய இரண்டு கொள்முதல் நிலையங்களுக்கும் சேர்த்து ஒரே ஒரு தொழிலாளர் குழு மட்டுமே நெல் அள்ளும் பணியில் ஈடுபட்டுள்ளதால் பணிகள் பெரிதும் மந்தமடைந்துள்ளன.

அதேசமயம், அதிக பணம் கொடுக்கும் வியாபாரிகளின் நெல் உள்ள நிலையங்களில் மட்டும் இரவு பகலாகக் கொள்முதல் தடையின்றி நடைபெறுகிறது.

மழையால் அறுவடை செய்த நெல்லைக் காப்பாற்ற முடியாமலும், அதிகாரிகளின் அலட்சியத்தால் விற்க முடியாமலும் தவிக்கும் சிறு விவசாயிகள், சமீபத்தில் செண்பகராமன்புதூர் மையத்திற்கு வந்த மாவட்ட ஆட்சியர், திட்டுவிளை, அந்தரபுரம் மற்றும் கடுக்கரை கொள்முதல் நிலையங்களிலும் திடீர் ஆய்வு மேற்கொண்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கண்ணீருடன் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தமிழக விடியல் செய்திகளுக்காக கேமராவில் ஜெனீருடன் பாவலர் ரியாஸ்.

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *