வாணியம்பாடி அடுத்த புல்லூர் கிராமத்தில் எருது விடும் விழாவில் காளை மாட்டின் கயிற்றில் சிக்கி படுகாயமடைந்த 8 ஆம் வகுப்பு பள்ளி மாணவன் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு.
வாணியம்பாடி,மார்ச்.12- திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த புல்லூர் கிராமத்தில் கடந்த 7 ஆம் தேதி எருது விடும் விழா நடைபெற்றது. இதில் வேடிக்கை பார்ப்பதற்காக திம்மாம்பேட்டை அடுத்த சிமுக்கம்பட்டு பகுதியை சேர்ந்த பன்னீர்செல்வன் என்பவரின் 13 வயது மகன் சதீஷ்குமார் சென்றுள்ளார். அப்போது காளைகள் ஓடும் பாதையான மந்தையில் நின்று கொண்டிருந்துள்ளார்.
அப்போது மந்தையில் காளைகள் ஓடும்போது காளைக்கு கட்டப்பட்டிருந்த கயிற்றில் சதீஷ்குமார் கால் சிக்கி இருபுறமும் கட்டப்பட்டிருந்த தடுப்பின் மீது மோதி தலையில் பலத்த காயம் ஏற்பட்டது.
உடனடியாக மாணவனை மீட்டு சிகிச்சைக்காக வாணியம்பாடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்று அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு பின்னர் மேல் சிகிச்சைக்காக வேலூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்று சேர்த்தனர். அங்கு மாணவன் 4 நாட்களாக தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் நேற்று சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.
சம்பவம் குறித்து திம்மாம்பேட்டை காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.