செப் 05, உடுமலை –
திருப்பூர் மாவட்டம் உடுமலை மத்திய பஸ் நிலையத்தில் இருந்து ஆனைமலை புலிகள் காப்பகத்தின் வழியாக கேரள மாநிலம் மூணாறுக்கு சாலை அமைக்கப்பட்டுள்ளது.இதன் மூலமாக பஸ்,சரக்கு,வாகன போக்குவரத்து இரண்டு மாநிலங்களுக்கு இடையே நடைபெற்று வருவதுடன் மலைவாழ் மக்களும் சுற்றுலாப் பயணிகளும் பயனடைந்து வருகின்றனர். இந்த நிலையில் தொடர் விடுமுறையின் காரணமாக மூணாரை நோக்கி சுற்றுலாப் பயணிகள் அதிக அளவில் வருகை தந்த வண்ணம் உள்ளனர்.அப்போது ஒரு சில சுற்றுலா பயணிகள் ஆர்வக்கோளாறால் வாகனங்களை சாலையில் நிறுத்திவிட்டு வனப்பகுதிக்குள் செல்வதாக தெரிகிறது.இதனால் வாகன போக்குவரத்து தடைப்பட்டு கடும் போக்குவரத்து நெரிசல் நிலவி வருகிறது.இதன் காரணமாக குடும்பத்துடன் சுற்றுலா வருகின்ற பொதுமக்கள் அவதிக்கு உள்ளாகி வருகிறார்கள்.ஒரு சிலர் செய்யும் தவறால் அப்பாவி பொதுமக்கள் பாதிக்கப்படுவது வேதனை அளிக்கிறது.மலையடிவாரப் பகுதியில் வனவிலங்குகள் நடமாட்டமும் உள்ளதால் சாலையில் காத்துக் கொண்டுள்ள சுற்றுலா பயணிகளுக்கு பாதுகாப்பற்ற சூழல் நிலவுகிறது.ஆகவே வனத்துறையினர் மற்றும் போலீசார் இணைந்து உடுமலை மூணாறு சாலையில் ரோந்து பணியில் ஈடுபட வேண்டும். வனப்பகுதிக்குள் அத்துமீரும் நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.அது மட்டுமின்றி ஒன்பதாறு மற்றும் சின்னாறு சோதனை சாவடியில் வாகன ஓட்டிகளுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தவும் முன்வர வேண்டும் என்று சுற்றுலா பயணிகள் தெரிவித்தனர்.
