திருநெல்வேலி, அக்.28:-திருநெல்வேலி மாவட்டத்தின் பிரதான அணைகளான பாபனாசம், சேர்வலாறு மற்றும் மணிமுத்தாறு ஆகிய 3 அணைகளில் இருந்தும், இன்று [அக்.28] காலையில் ஒரேநேரத்தில், நடப்புப் பிசானப்பருவ சாகுபடிக்காக தண்ணீர் திறந்துவிடப்பட்டது. தமிழக சட்டமன்ற பேரவைத்தலைவர் [சபாநாயகர்] மு.அப்பாவு, சிறப்புப் பூஜைகளுக்குப் பின்னர், இந்த அணைகளில் இருந்து முறைப்படி தண்ணீரை, திறந்து வைத்தார். இந்த அணைகளின் கீழுள்ள, வடக்குக் கோடை மேல் அழகியான், தெற்கு கோடை மேல் அழகியான், நதியுண்ணி, கன்னடியன், திருநெல்வேலி மற்றும் பாளையங்கோட்டை ஆகிய 7 கால்வாய்களிலும், அடுத்த ஆண்டு [2025] மார்ச் மாதம் 31-ஆம் தேதி முடிய, மொத்தம் 155 நாட்களுக்கு, திறந்துவிடப்பட்டுள்ள இந்த தண்ணீரினால், நெல்லை மாவட்டத்தில் அம்பாசமுத்திரம், சேரன்மகாதேவி, திருநெல்வேலி மற்றும் பாளையங்கோட்டை ஆகிய வட்டங்களில் உள்ள, 40 ஆயிரம் ஏக்கர் நேரடி மற்றும் மறைமுக நிலங்கள், பாசன வசதி பெறும். தண்ணீர் திறப்பு நிகழ்ச்சியில், மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் கா.ப. கார்த்திகேயன் தலைமையில், திருநெல்வேலி நாடாளுமன்ற உறுப்பினர் சி.ராபர்ட் புரூஸ், பாளையங்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் மு.அப்துல் வகாப், மாவட்ட பஞ்சாயத்து தலைவர் வி.எஸ்.ஆர். ஜெகதீஷ் மற்றும் நீர்வளத்துறை, வேளாண்துறை, உள்ளாட்சித்துறை உயர் அலுவலர்கள், கலந்து கொண்டனர்.
திருநெல்வேலி மாவட்ட செய்தியாளர் : மேலப்பாளையம் ஹஸன்.