உடுமலை: அக்டோபர் 14.
தீபாவளி உள்ளிட்ட பண்டிகை காலங்களில் கைத்தறி ஆடைகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து மக்கள் வாங்கினால் பல்வேறு இடையூறுகளை சந்தித்தும் பாரம்பரியமாக கைத்தறி நெசவு செய்யும் தங்கள் குடும்பத்தினருக்கு பயனுள்ளதாக இருக்கும் என நெசவுத் தொழிலாளர்கள் தெரிவிக்கின்றனர்.
உடுமலை, வாளவாடி, பூளவாடி, மலையாண்டிபட்டினம், புக்குளம், குரல் குட்டை, உள்ளிட்ட கிராமங்களில் பாரம்பரியமான கைத்தறி நெசவில் நூற்றுக்கணக்கான குடும்பத்தினர் ஈடுபட்டு வருகின்றனர்.
வருவாய் குறைவு, அங்கீகாரம் இல்லாத மற்றும் அரசின் நலத்திட்ட உதவிகள் முறையாக கிடைக்காமல் பல்வேறு பாதிப்புகளை குடும்பத்தினர் சந்தித்து வருகின்றனர். இருப்பினும் கைத்தறி நெசவை கைவிடாமல் இன்றளவும் தொடர்ந்து வருகின்றனர்.
தீபாவளி பண்டிகைக்காக சில மாதங்களுக்கு முன் பெறப்பட்ட ஆர்டர்களை முடிக்கும் பணியில் தற்போது தொழிலாளர்கள் குடும்பத்தினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
தற்போது தனியாரிடம் நூல் வாங்கி கூலிக்கு நெசவு செய்தல் முறையையே பெரும்பாலானவர்கள் பின்பற்றி வருகின்றனர்.
மூன்று நாட்கள் வரை இருவர் உழைப்பில் ஒரு பட்டுச் சேலை உருவாக்கப்பட்டால் அவர்களுக்கு சராசரியாக ரூ 1,100 மட்டுமே வருவாய் கிடைக்கிறது. சீசன் இல்லாத சமயங்களில் ஆர்டர் இல்லாமல் வருவாய் இழப்பையும் சந்தித்து வருகின்றனர்.
ஆனால் பல்வேறு சிறப்பம்சங்களை உள்ளடக்கிய கைத்தறி பட்டு நெசவை மட்டும் அவர்கள் கைவிடவில்லை.
உடுமலை பகுதியில் உள்ள கைத்தறி நெசவாளர்கள் கூறியதாவது:-
கிராமங்களில் முன்பு, பண்டிகை சீசனுக்கு முன்பாக உள்ளூர் ஆர்டர் கள் அதிகளவு கிடைக்கும் நூல் மற்றும் இதர பொருட்களை நாங்களே வாங்கி நெசவு செய்து கொடுத்து வந்தோம்.
படிப்படியாக கைத்தறி நெசவு ரகங்களுக்கு மவுசுகுறைய துவங்கியது. இதனால் பெரும்பாலான மாதங்கள் வேலை வாய்ப்பு இன்றி பாதிக்கப்பட்டோம்.
இதனால் பெரிய நிறுவனங்களுக்கு கூலி அடிப்படையில் பட்டு நெசவு செய்து வருகிறோம் மக்கள் பண்டிகை காலங்களில் கைத்தறி ரகங்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து கடைகளில் வாங்கினால் எங்களுக்கு ஆண்டு முழுவதும் ஆர்டர் கிடைக்கும்.
தீபாவளி பொங்கல் பண்டிகைகளில் நமது பாரம்பரிய ரகங்களை அணிய மக்கள் முன் வரவேண்டும். நம் நாட்டின் பாரம்பரிய கைத்தறி நெசவு தொழில் முற்றிலும் காணாமல் போவதை தடுக்க மக்கள்இத் தொழிலுக்கு கை கொடுக்க வேண்டும்.
அதேபோல் கைத்தொழில் ரகங்கள் என்ற பெயரில் விசைத்தறி ரகங்களை விற்பனை செய்வதும் அதிக பாதிப்பை ஏற்படுத்துகிறது .இது குறித்து அரசு உரிய கவனம் செலுத்த வேண்டும்.
நெசவாளர்களுக்கு அரசு அறிவிக்கும் பெரும்பாலான திட்டங்கள் முழுமையாக கிடைப்பது இல்லை பல்வேறு இடையூறுகளை சந்தித்தாலும் பாரம்பரியமாக தொழில் ஈடுபட்டு வருகிறோம்.
இளைய தலைமுறையினர் கைத்தறி நெசவுத் தொழிலில் ஈடுபட தயக்கம் காட்டுவதால் இத்தொழிலின் எதிர்காலம் கேள்விக்குறியாக உள்ளது. இவ்வாறு தெரிவித்தனர்.
கைத்தறி நெசவாளர்கள் அதிகம் உள்ள கிராமங்களில் அரசின் நலவாரியம் உள்ளிட்ட நலத்திட்டங்கள் எளிதாக அவர்களுக்கு கிடைக்கும் வகையில் சிறப்பு முகாம்கள் நடத்தப்பட வேண்டும்.
நலத்திட்டங்கள் குறித்து போதிய விழிப்புணர்வு இல்லாதது பிற முகாம்களில் சென்று விண்ணப்பிக்க தயக்கம் காட்டுவது போன்ற காரணங்களினால் அரசு கைத்தறி நெசவாளர்களுக்கு செயல்படுத்தப்படும் திட்டங்கள் பெயரளவுக்கு பலன் தருவது குறிப்பிடத்தக்கதாகும்.
