திண்டுக்கல் மாவட்ட தடகள சங்கம் சார்பில் தெற்காசிய ஜூனியர் தடகள சாம்பியன்ஷிப் தொடரை சிறப்பாக நடத்திய தமிழ்நாடு ஆத்லெட்டிக் அசோசியேசன் செயலாளர் லதாவுக்கும், இதே போட்டியில் நீளம் தாண்டுதல் தங்கம் வென்ற தடகள வீரர் சித்தின் அர்ஜுனுக்கும் பாராட்டு விழா நடந்தது. இதில் திண்டுக்கல் மாவட்ட தடகள சங்க தலைவர் துரை தலைமை உரையாற்றினார். பொருளாளர் துரைராஜ் வரவேற்றார். தமிழ்நாடு தடகள சங்க செயலாளர் லதா பரிசளித்தார். திண்டுக்கல் ஜி. டி. என் கல்லூரியினுடைய முதன்மை செயல் அதிகாரி டாக்டர் லயன் ரத்தினம், மாவட்ட கால்பந்து கழகச் செயலாளர் சண்முகம், கபடி சங்க செயலாளர் சவட முத்து, ராம்சன் பள்ளி தாளாளர் ராமசாமி, பட்ஸ் பள்ளி தாளாளர் கார்த்திக், எம் .எஸ். பி .பள்ளி தாளாளர் முருகேசன் உட்பட பலர் பங்கேற்றனர். தமிழ்நாடு தடகளச் சங்க செயலாளர் லதா பேசியதாவது: தடகள சங்கம் உலக அளவில் தடம் பதித்து வருகிறது. இந்த சங்கத்தின் சார்பில் ஆறு பேர் ஒலிம்பிக்கில் இந்த ஆண்டு பங்கேற்றனர். இது தமிழகத்துக்கு கிடைத்த பெருமை ஆகும்.
திண்டுக்கல் மிகச்சிறப்பாக செயல்படுகிறது. நல்ல உள்ளங்கள் திண்டுக்கல்லில் இருப்பதால், இந்த சங்கத்தின் மூலம் ஒலிம்பிக் போட்டிகளில் நாம் பங்கேற்று சிறப்பிக்க முடியும். இதற்கு உறுதுணையாக அனைவரும் இருப்பார்கள். திண்டுக்கல்லுக்கு வந்தவுடன் எனக்கு முழு நிர்வாகிகளையும் மற்றும் செயல்பாட்டாளர்களை பார்க்கும் போது எனக்கு ஒரு உத்வேகம் பிறந்துள்ளது. பல இளைஞர்களை வளர்ப்பதற்கு இந்த சங்கம் பயன்படும். இவ்வாறு அவர் பேசினார்.
திண்டுக்கல் ஜி. டி .என்.கல்லூரி முதன்மை செயலாளர் ரத்தினம் பேசியதாவது: தமிழகத்தில் ஜி.டி.என். கல்லூரி விளையாட்டில் சிறந்து விளங்குகிறது. இங்குள்ள மாணவர்கள் பல போட்டியில் வெற்றி பெற்று வாகை சூடி உள்ளனர். விளையாட்டு மாணவர்களுக்கு உடை ,உணவு, இருப்பிடம் , கல்வி உள்ளிட்ட அனைத்து வசதிகளும் இலவசமாக செய்து தரப்படுகிறது. தடகளப் போட்டியில் நிச்சயமாக நாங்கள் வெற்றி வாகை சூடுவோம். இந்த சங்கத்தின் மூலம் ஒலிம்பிக் உட்பட பல போட்டிகளில் பதக்கங்களை வெல்வோம். இதற்கு நான் உறுதி கூறுகிறேன். இந்த சங்கத்தையும், விளையாட்டு மாணவர்களையும் உச்சத்துக்கு கொண்டு செல்வது எங்கள் நோக்கம். இவ்வாறு பேசினார். திண்டுக்கல் மாவட்ட தடகளச் சங்க செயலாளர் சிவக்குமார் நன்றி கூறினார்.
திண்டுக்கல் நிருபர் : பாலசிந்தன்