திருநெல்வேலி
திருநெல்வேலி பாளையங்கோட்டையில் உள்ள நூற்றாண்டு மண்டபத்தில், இந்தியன் ஆயில் கார்ப்பரேசன், இந்தியன் செயற்கை உறுப்புகள் உற்பத்தி கழகம் [ அலிம்கோ] மற்றும் நெல்லை மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலத்துறை ஆகியன இணைந்து, சமுதாய பொறுப்பு நிதித்திட்டத்தின் கீழ் நடத்திய மெகா விழாவில்,மாற்றுத் திறனாளிகள் மொத்தம் 1231 பேருக்கு, 98 கோடியே 91 லட்சம் ரூபாய் மதிப்பிலான, மாற்றுத் திறனாளிகளுக்கான ஊபகரணங்கள், வழங்கப்பட்டன. மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் இரா. சுகுமார் தலைமை வகித்தார். நெல்லை மாநகராட்சி ஆணையாளர் டாக்டர் மோனிகா ராணா, பாளையங்கோட்டை தொகுதி சட்டமன்ற உறுப்பினர் மு.அப்துல் வகாப், நெல்லை மாநகராட்சி மேயர் கோ.ராம கிருஷ்ணன், துணை மேயர் கே.ஆர்.ராஜூ, தமிழக சட்டமன்ற பேரவை முன்னாள் தலைவர் [சபாநாயகர்] இரா.ஆவுடையப்பன், தமிழக இளைஞர்நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை முன்னாள் அமைச்சர் டி.பி.எம்.மைதீன் கான், இந்தியன் ஆயில் கார்ப்பரேசன் விற்பனை மேலாளர் பிரதீஸ்வரன் ஆகியோர், முன்னிலை வகித்தனர்.

இவ்விழாவில் பேசிய அமைச்சர் நேரு, குறிப்பிட்டதாவது:-
“தமிழக அரசானது, மாற்றுத்திறனாளிகள் நலன்களுக்காக எண்ணற்ற நல்ல பல திட்டங்களை, தாயுள்ளத்துடன் செயல்படுத்தி வருகிறது. சமுதாயத்தில், மற்றவர்களைப் போலவே மாற்றுத்திறனாளிகளும் தகுதியுடன் வாழ்ந்திடவும், அவர்கள் எவரையும் சார்ந்து வாழ்ந்திடாமல், அவர்கள் தங்களுடைய தேவைகளை தாங்களே நிறைவேற்றிக் கொள்ளும் வகையில், பொருளாதார மேம்பாடு அடைய, முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையிலான திராவிட மாடல் அரசு அரும்பாடு பட்டு வருகிறது!”- இவ்வாறு, அமைச்சர் நேரு குறிப்பிட்டார். விழாவில், மாவட்ட வருவாய் அலுவலர் மா.சுகன்யா, திருநெல்வேலி வருவாய் கோட்டாட்சியர் கண்ணா கருப்பையா, மாவட்ட ஊராட்சி குழு துணைத்தலைவி செல்வலெட்சுமி அபிதாப், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் சு.சிவ சங்கரன், அலிம்கோ நிறுவன மேலாளர்கள் பி.கே.குப்தா, ரிஷப் மெக்ரோட்ரா உட்பட பலர், கலந்து கொண்டனர்.
திருநெல்வேலி மாவட்ட செய்தியாளர் “மேலப்பாளையம்” ஹஸன்
