நாகர்கோவில் | மார்ச் 6
கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் அலுவலக வருவாய் கூட்டரங்கில் நடைபெற்ற அரசு விழாவில், தமிழ்நாடு துணை முதலமைச்சர் திரு. உதயநிதி ஸ்டாலின் கலந்துகொண்டு ரூ.91.20 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் மற்றும் புதிய பணிகளை தொடங்கி வைத்தார்.

இந்த நிகழ்ச்சியில் பால்வளத்துறை அமைச்சர் திரு. த. மனோ தங்கராஜ் தலைமையிலும், மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி ஆர். அழகுமீனா, இ.ஆ.ப. மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. ஸ்டாலின், இ.கா.ப. ஆகியோர் முன்னிலையிலும் நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்த விழாவில் பல்வேறு துறைகள் சார்பில் மொத்தம் 7601 பயனாளிகளுக்கு ரூ.72.64 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.
மகளிர் திட்டத்தின் கீழ் 3000 பெண்களுக்கு ரூ.10.61 கோடி மதிப்பில் சுய உதவி குழு வங்கி கடன் வழங்கப்பட்டது. கூட்டுறவுத்துறை மூலம் டாப்செட்கோ கடன், கால்நடை பராமரிப்பு கடன், பயிர் கடன் உள்ளிட்ட பல்வேறு கடனுதவிகள் வழங்கப்பட்டன.
மேலும் மாணவர்களுக்கு கல்வி கடன், விவசாயிகளுக்கு விவசாய மற்றும் தொழில் கடன், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினருக்கு வன உரிமை பட்டா, தொழிலாளர் நலத்துறை மூலம் இயற்கை மரணம் நிவாரணம் மற்றும் திருமண உதவி, மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை, முதியோருக்கு புதிய ஓய்வூதியம் உள்ளிட்ட பல்வேறு உதவிகள் வழங்கப்பட்டன.
பேரூராட்சிகள் மூலம் 628 பயனாளிகளுக்கு ரூ.15.70 கோடி மதிப்பில் அனைவருக்கும் வீடு திட்டத்தின் கீழ் வீடுகள் வழங்கப்பட்டன.
மாவட்ட தொழில் மையம் மூலம் கலைஞர் கைவினைத் திட்டம் மற்றும் அண்ணல் அம்பேத்கர் தொழில் முன்னோடி திட்டம் மூலம் கடனுதவிகள் வழங்கப்பட்டன.
மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை மூலம் மாணவர்களுக்கு கல்வி உதவி மற்றும் குடும்பங்களுக்கு இறப்பு நிவாரணத் தொகையும் வழங்கப்பட்டது.
ஊரக வளர்ச்சி துறை சார்பில் 25 கிராம ஊராட்சிகளில் சாலை, குடிநீர் உள்ளிட்ட பணிகளுக்கு ரூ.10 கோடி மதிப்பில் 126 பணிகள் தொடங்கப்பட்டன.
மேலும் மருங்கூர், புத்தளம், திங்கள்நகர், கல்லுக்கூட்டம் மற்றும் சுசீந்திரம் பேரூராட்சிகளில் ரூ.8.38 கோடி மதிப்பில் 14.32 கி.மீ சாலை பணிகளுக்கு அடிக்கல் நாட்டப்பட்டது.
வனத்துறை சார்பில் ரூ.24 லட்சம் மதிப்பில் பழங்குடியின இளைஞர்களுக்கான திறன் மற்றும் போட்டித் தேர்வு பயிற்சி மையம் திறந்து வைக்கப்பட்டது.
நிகழ்ச்சியில் தமிழ்நாடு மாநில உணவு ஆணைய தலைவர் என். சுரேஷ்ராஜன், சட்டமன்ற உறுப்பினர்கள் ராஜேஷ்குமார் (கிள்ளியூர்), ஜே.ஜி. பிரின்ஸ் (குளச்சல்), தாரகை கத்பர்ட் (விளவங்கோடு), நாகர்கோவில் மாநகராட்சி மேயர் ரெ. மகேஷ், மாவட்ட வருவாய் அலுவலர் அ. பூங்கோதை, மாநகராட்சி ஆணையர் நிஷாந்த் கிருஷ்ணா, துறை அலுவலர்கள் மற்றும் பொதுமக்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
தமிழக விடியல் செய்திகளுக்காக கேமராமேன் ஜெனீருடன்
குமரி மாவட்ட நிருபர் பாவலர் ரியாஸ்.
