நாகர்கோவில், மார்ச் 05:
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு, வருவாய்த்துறை அலுவலர்கள் மற்றும் ஊழியர்கள் தங்களுக்குப் பணிப் பாதுகாப்பு சட்டம் இயற்றக் கோரி ஊர்வலமாக வந்து சாலை மறியலில் ஈடுபட்டனர்.
நில அளவைப் பணிகளின் போதும், மணல் கொள்ளையைத் தடுக்கும் நடவடிக்கைகளின் போதும் அதிகாரிகளுக்கு விடுக்கப்படும் தொடர் மிரட்டல்களைத் தடுக்க அரசு தனிச் சட்டம் கொண்டுவர வேண்டும் எனவும், கிராம உதவியாளர்களுக்குக் காலமுறை ஊதியத்துடன் மேம்படுத்தப்பட்ட சம்பளம் வழங்க வேண்டும் எனவும் அவர்கள் வலியுறுத்தினர்.
கடந்த சில நாட்களாகக் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுப்பட்டும் அரசு தரப்பில் பேச்சுவார்த்தைக்கு எவரும் அழைக்க முன்வரவில்லை என வேதனை தெரிவித்த போராட்டக்காரர்கள், அரசு ஊழியர்களாக இருந்தும் தங்களது உரிமைகளுக்காகக் கையேந்தும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளதாகக் குற்றம்சாட்டினர்.
இந்நிலையில், ஆட்சியர் அலுவலகம் முன்பு மறியலில் ஈடுபட்டதால், பெண்கள் உட்பட 200-க்கும் மேற்பட்டோரை காவல்துறையினர் கைது செய்ததைத் தொடர்ந்து அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
தமிழக விடியல் செய்திகளுக்காக கேமராமேன் ஜெனீருடன் பாவலர் ரியாஸ்
