செப் 4, கன்னியாகுமரி
கன்னியாகுமரி மாவட்டம் திருவிதாங்கோடு முஸ்லிம் ஜமாத்திற்கு சொந்தமான பூவங்கோடு பகுதியில் உள்ள சுமார் 4.55 ஏக்கர் (சர்வே எண் 171/4) நிலத்தை போலி ஆவணங்கள் தயாரித்து அபகரித்துள்ள லேண்ட் மாஃபியா கும்பல் குறித்த அதிர்ச்சிகரமான மோசடி வெளிச்சத்துக்கு வந்துள்ளது.
கடந்த 21.08.2025 அன்று திருவிதாங்கோடு பகுதியில் வசித்து வரும் புரோக்கர் ஷேக் முகமது என்பவன், மேற்படி 4.55 ஏக்கர் நிலத்தை தன்னுடைய தாயாரின் சொத்து எனக் காட்டி, போலியாக ஆவணங்கள் தயாரித்து, பூவங்கோடு பத்திர பதிவு அலுவலகத்தில் தற்காலிக பத்திரப்பதிவாளர் மூலம் பதிவு செய்துள்ளான். அதற்கு அடுத்தநாளே (22.08.2025) அவன் பெயரில் தனிப்பட்டா மாற்றமும் செய்யப்பட்டிருக்கிறது என்பது மிகப்பெரிய சந்தேகத்தையும் அதிருப்தியையும் ஏற்படுத்தியுள்ளது.
பின்னர், 25.08.2025 அன்று அதே நிலத்தை லேண்ட் மாஃபியா கும்பலைச் சேர்ந்த புரோக்கர் டெல்பின் என்பவனுக்கு சுமார் 2.27 ஏக்கர் விற்பனை பத்திரமாக மாற்றியும், மீதமுள்ள 2.27 ஏக்கர் நிலத்தை ஜமாலுதீன் என்பவனுக்கு பவர் பத்திரமாக பதிந்தும், பல கோடி மதிப்புள்ள வக்ஃப் செய்யப்பட்ட பைத்துல் மால் சொத்தை மோசடியாக அபகரித்துள்ளனர்.
இந்த மோசடியில் ஈடுபட்டவர்கள் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள வக்ஃப் சொத்துக்களை இதேபோன்று போலி ஆவணங்கள் தயாரித்து அபகரித்து வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. ஏற்கனவே பத்திரப்பதிவு துறையில் பல்வேறு முறைகேடுகள் நடந்து வரும் நிலையில், வக்ஃப் செய்யப்பட்ட முஸ்லிம் சமூகச் சொத்தை முறைகேடாக பதிவு செய்திருப்பது மிகப்பெரிய குற்றமாகும்.
எனவே, இச்சம்பவத்தில் பங்குபற்றிய பத்திரப்பதிவாளர், போலி ஆவணங்கள் தயாரித்த லேண்ட் மாஃபியா கும்பல் உறுப்பினர்கள், அனைவர் மீதும் தமிழ்நாடு அரசு மற்றும் வக்ஃப் வாரியம் உடனடியாக விசாரணை நடத்தி, சம்பந்தப்பட்ட மோசடியாளர்களை கைது செய்தும், சட்டரீதியான நடவடிக்கை எடுத்து, போலியாக செய்யப்பட்ட பத்திரப்பதிவை ரத்து செய்யுமாறு வலியுறுத்துகிறோம்.
திருவிதாங்கோடு மற்றும் பூவங்கோடு பகுதி பொதுமக்கள்.
குமரி மாவட்ட செய்தியாளர் பாவலர் ரியாஸ்.
