நீலகிரி மாவட்ட கூட்டுறவுத்துறையின் சார்பாக நீலகிரி மாவட்ட கூட்டுறவு ஒன்றியம் மற்றும் மசினகுடி அரசு ஆரம்ப சுகாதார நிலையம் இணைந்து மசனகுடி மலைவாழ் மக்கள் பெரும் பலநோக்கு கூட்டுறவு சங்கத்தின் செயல் எல்லையில் உள்ள மசினகுடியில், மலைவாழ் மற்றும் பழங்குடியின மக்களுக்கு நீலகிரி மண்டல கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் இரா. தயாளன் தலைமையில் சிறப்பு இலவச பொது மருத்துவ முகாம் மற்றும் உறுப்பினர் கல்வி திட்டம் நடைபெற்றது.
தனது தலைமை உரையில் இச்சங்கமானது மலைவாழ் மற்றும் பழங்குடியின மக்களுக்கென பிரத்தியேகமாக உருவாக்கப்பட்ட சிறப்பு வகை சங்கம் எனவும் இச்சங்கத்தின் உறுப்பினர்கள் தங்கள் வாழும் பகுதிக்கு அருகில் உள்ள சிறுவனப் பொருட்களாகிய தேன்,பருத்தி மற்றும் புளி ஆகிய பொருட்களை சேகரித்து இச்சங்கத்திற்கு வழங்கி அதன் மூலம் தங்களுடைய பொருளாதார தேவைகளை பூர்த்தி செய்து வருகின்றனர் என்றார். தமிழக அரசானது மலைவாழ் மற்றும் பழங்குடியின மக்களுடைய வாழ்வாதார மேம்பாட்டிற்காக பல்வேறு நலத்திட்ட உதவிகளையும் சிறப்பு வகை திட்டங்களையும் வழங்கி வருகிறது எனவும் அதனை இப்பகுதி மக்கள் சம்பந்தப்பட்ட துறைகளை அணுகி விரைவில் பெற்றுக்கொண்டு தங்களது பொருளாதார நலனை மேம்படுத்திக் கொள்ள வேண்டும் எனவும் அறிவுறுத்தினார். நிகழ்ச்சியில் உறுப்பினர்களிடையே கலந்துரையாடல் நடைபெற்றது.
கலந்துரையாடலின் போது உறுப்பினர்களுடைய பல்வேறு கேள்விகள் மற்றும் தேவைகளுக்கு இணைப்பதிவாளர் அவர்கள் பதில் அளித்தார். மேலும் உறுப்பினர்களிடையே தங்களது குழந்தைகளுக்கு நல்ல தரமான கல்வியினை வழங்க வேண்டும் எனவும் கல்வி மட்டுமே அழிவில்லாத செல்வம் அது மட்டுமே உங்களுடைய தலைமுறையினை முன்னேற்றத்திற்கு எடுத்து செல்லும் எனவும் கூறினார்.
நிகழ்ச்சியில் இரண்டு நபர்களுக்கு ரூபாய் இரண்டு இலட்சம் மதிப்பிலான கடன் மற்றும் ஒன்பது நபர்களுக்கு ரூபாய் ஆறு இலட்சம் மதிப்பிலான கடன் உதவி ஆகியவை மண்டல இணைப்பதிவாளர் அவர்களால் பயனாளிகளுக்கு வழங்கப்பட்டது. செருமுள்ளி தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தின் செயலாளர் திரு. மேத்தியு ஜான் நிகழ்ச்சியினை தொகுத்து வழங்க சங்கத்தின் செயலாளர் திரு. லட்சுமணன் வரவேற்புரை ஆற்றினார்.
சங்கத்தின் செயலாட்சியர்/கூட்டுறவு சார்பதிவாளர் ரா. திவ்யா வாழ்த்துரை வழங்கினர். மக்களுக்கு உடல்நல ஆரோக்கியம் குறித்து மருத்துவர் ஹரிபிரசாத் விரிவாக எடுத்துரைத்தார். கூட்டுறவு சங்கங்கள் மற்றும் வங்கிகள் வாயிலாக வழங்கப்படும் பல்வேறு விதமான கடன்கள் மற்றும் சேவைகள் குறித்தும் நீலகிரி மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி சரக மேற்பார்வையாளர் கே. நாசர் விரிவாக எடுத்துரைத்தார்.
பால் கூட்டுறவு சங்கங்களின் செயல்பாடுகள் குறித்து மசினகுடி பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்க செயலாளர் திரு. ஜெயபிரகாஷ் உரையாற்றினார். இங்கு நடைபெற்ற இலவச பொது மருத்துவ முகாமில் நூற்றுக்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டு உடல் பரிசோதனை செய்தனர். நிகழ்ச்சியின் இறுதியாக சங்கத்தின் எழுத்தர் ரா. நவீன் நேதாஜி நன்றியுரை கூறினார். இந்நிகழ்ச்சியில் சங்கத்தின் எழுத்தர் திரு. ப. ஆனந்தக்குமார், கூட்டுறவு சங்க பணியாளர்கள், உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.
