திருநெல்வேலி,நவ.13:- தமிழ் பண்பாட்டு ஆய்வாளரும், பிரபல எழுத்தாளருமான ராஜ்கவுதமன், இன்று [நவ.13] அதிகாலையில், திருநெல்வேலி பாளையங்கோட்டை மகாராஜா நகரில் உள்ள, அவருடைய இல்லத்தில், காலமானார்.அவருக்கு வயது 74. மறைந்த ராஜ்கவுதமன், 20-ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில், தமிழ்க்கலாச்சார மற்றும் இலக்கிய வரலாற்று ஆய்வுகளுக்கு, முன்னோடியாக திகழ்ந்தவர் ஆவார். குறிப்பாக, ஒடுக்கப்பட்ட மக்களின் அரசியலை, தன்னுடைய எழுத்து மூலம், தமிழகம் முழுவதும் கொண்டு சேர்த்த பெருமை, ராஜ்கவுதமனுக்கு மட்டுமே உரியதாகும். இவருடைய மறைவுச்செய்தி அறிந்தவுடன், தமிழ்நாடு முலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கற்செய்தி வெளியிட்டு, தனது அனுதாபத்தை தெரிவித்தார். இதனைத் தொடர்ந்து, முதல்வர் உத்தரவுப்படி, தமிழக இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேமாபாட்டுத்துறை முன்னாள் அமைச்சரும், திருநெல்வேலி மத்திய மாவட்ட திமுக பொறுப்பாளருமான டி.பி.எம். மைதீன் கான் உடனடியாக, எழுத்தாளர் ராஜ்கவுதமன் வீட்டுக்கு சென்று, அவருடைய உடலுக்கு “மலர் மாலை” வைத்து, “புகழ் அஞ்சலி” செலுத்தினார். அவரைத் தொடர்ந்து, பாளையங்கோட்டை தொகுதி சட்டமன்ற உறுப்பினர் மு.அப்துல் வகாப், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் என். மாலைராஜா, நெல்லை மாநகராட்சி துணை மேயர் கே.ஆர்.ராஜூ ஆகியோரும், ராஜ்கவுதமன் உடலுக்கு, “மரியாதை” செய்தனர். அதன் பின்னர், அனைவரும் எழுத்தாளர் ராஜ்கவுதமன் குடும்பத்தினரிடம் “அனுதாபம்” தெரிவித்து, “ஆறுதல்” கூறினர்.
திருநெல்வேலி மாவட்ட செய்தியாளர் “மேலப்பாளையம்” ஹஸன்