நாகர்கோவில்,டிசம்பர் 13:
நாகர்கோவில் மாநகரத்தில் நாளுக்கு நாள் பெருகிவரும் போக்குவரத்து நெரிசலுக்குத் தீர்வு காண, சாலைகளை விரிவாக்கம் செய்வது காலத்தின் கட்டாயம் என்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி விவசாயப் பிரிவு மாநிலச் செயலாளர் ஆர்.எஸ்.ராஜன் வலியுறுத்தியுள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
“நாகர்கோவில் நகரம் கடந்த 01.03.2019 அன்று மாநகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டது. சுமார் 49.10 சதுர கிலோமீட்டர் பரப்பளவு கொண்ட இம்மாநகரம், இயல்பாகவே குறுகிய சாலைகளையே கொண்டுள்ளது. தற்போதைய சூழலில் சாலைகள் விரிவாக்கம் செய்யப்படாத காரணத்தினால், காலை மற்றும் மாலை நேரங்களில் வாகனங்கள் கடும் போக்குவரத்து நெரிசலில் சிக்கித் தவிக்கின்றன. சில சமயங்களில் ஒரு மணி நேரம் வரை வாகனங்கள் நகர முடியாமல் நிற்கும் சூழல் உள்ளது.
குறிப்பாக, வடசேரி பேருந்து நிலையத்திலிருந்து ஒழுகினசேரி செல்லும் சாலை, வடசேரி – வேப்பமூடு சாலை, அண்ணா பேருந்து நிலையத்திலிருந்து கோட்டாறு காவல் நிலையம் வழியாக மீனாட்சிபுரம் செல்லும் சாலை, அண்ணா பேருந்து நிலையத்திலிருந்து செட்டிகுளம் செல்லும் சாலை, கோட்டாறு சவேரியார் கோயில் சந்திப்பிலிருந்து பறக்கை ரோடு சந்திப்பு வரையிலும், மற்றும் இந்து கல்லூரி வழியாக செட்டிகுளம் செல்லும் சாலை எனப் பல முக்கிய சாலைகள் மிகவும் குறுகலாகவே உள்ளன.
அதிகரித்து வரும் மக்கள் தொகை மற்றும் வாகனப் பெருக்கத்திற்கு ஏற்ப சாலைகள் இல்லாததால் அடிக்கடி விபத்துகளும் ஏற்படுகின்றன. இதற்குப் பல இடங்களில் உள்ள ஆக்கிரமிப்புகளும் ஒரு முக்கிய காரணமாகும்.
எனவே, நாகர்கோவில் மாநகரப் பகுதிகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி, சாலை விரிவாக்கப் பணிகளை உடனடியாகத் தொடங்க வேண்டும். அனைத்து முக்கிய சாலைகளையும் 80 அடி முதல் 100 அடி வரை அகலப்படுத்தி, இருபுறமும் வாகனங்கள் தடையின்றிச் செல்ல வழிவகை செய்ய வேண்டும்.
மேலும், விபத்துகளைத் தவிர்க்கவும், வாகனங்கள் சீராகச் செல்லவும் சாலைகளின் நடுவே ‘சென்ட்ரல் மீடியன்’ (தடுப்புச் சுவர்) அமைக்க வேண்டும். எதிர்காலத் தேவையை கருத்தில் கொண்டு, இப்போதே மாற்றுச் சாலைத் திட்டங்களையும் வகுக்க வேண்டும் என்று தமிழக காங்கிரஸ் விவசாயப் பிரிவு சார்பில் கேட்டுக்கொள்கிறேன்.” இவ்வாறு அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
தமிழக விடியல் செய்திகளுக்காக கேமராமேன் ஜெனீருடன் பாவலர் ரியாஸ்
