திருப்பூர் மாவட்டம் உடுமலையில் உள்ள புகழ் பெற்ற பிரசன்ன விநாயகர் கோவிலில் கந்தசஷ்டி சூரசம்ஹார விழா கடந்த 2-ந் தேதி தொடங்கியது.
பக்தர்கள் காப்பு கட்டி தங்களால் முடிந்த வகையில் பால்பழம் அருந்தியும்,ஒரு வேளை உணவும்,குறுமிளகு எடுத்துக் கொண்டும் பயபக்தியோடு விரதம் மேற்கொண்டு வந்தனர்.
இந்த நிலையில் விழாவின் சிகர நிகழ்ச்சியான சூரசம்ஹார விழா உடுமலை பிரசன்ன விநாயகர்
கோவிலில் வாண வேடிக்கை, கைலாச வாத்தியம், மங்கள வாத்தியம் முழங்க கோலாகலமாக நடைபெற்றது.
முன்னதாக இன்று மதியம் மூன்று மணியளவில் முருகப்பெருமான் தாயாரிடம் வேல் வாங்கும் உற்சவமும், 4 மணியளவில் கந்தசஷ்டி சூரசம்ஹாரத்திற்காக புறப்பாடு நிகழ்ச்சியும் நடைபெற்றது.அதைத் தொடர்ந்து மாரியம்மன் கோவில் அருகில் கஜமுகாசூரன்,குட்டை விநாயகர் கோவில் முன்பு பானுகோபன், தலைகொண்டம்மன் கோவில் முன்பு சிங்கமாகசூரன், கொல்லம்பட்டறை பொள்ளாச்சி ரோடு சந்திப்பில் பத்மாசூரன் உள்ளிட்ட அசுரர்களை வேல் ஏந்தி சப்பரத்தில் வந்த முருகப் பெருமான் வதம் செய்தார்.
முன்னதாக சூரசம்ஹாரம் நடைபெறும் இடங்களில் பக்தர்கள் கடவுள் வேடம் அணிந்து பக்தி பரவசத்துடன் நடனமாடி வழிபட்டனர். இதையடுத்து அபிஷேக ஆராதனைகள் சிறப்பு பூஜை நடைபெற்றது.
இந்த நிகழ்வில் ஏராளமான பக்தர்கள்,பொதுமக்கள் கண்டு களித்து தங்களது விரத்தை முடித்து கொண்டனர். விழாவை முன்னிட்டு உடுமலை போலீஸ் துணை சூப்பிரண்டு வெ.ஆறுமுகம் தலைமையில் போலீசார் மற்றும் ஊர் காவல் படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
உடுமலை: நிருபர் மணி