வாணியம்பாடி, அக்.14- திருப்பத்தூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஷ்ரேயா குப்தா உத்தரவின் பேரில் தொடர்ந்து 2-வது நாளாக நேற்று துணை காவல் கண்காணிப்பாளர்கள், ஆய்வாளர்கள், உதவி ஆய்வாளர்கள் தலைமையில் தனித்தனியாக குழுக்கள் அமைக்கப்பட்டு பல்வேறு இடங்களில் சோதனை மேற்கொள்ளப்பட்டது.
இந்த சோதனையில் உமராபாத் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட மேல் சாணங்குப்பம் பகுதியில் பாண்டியன் ( வயது 45) என்பவர் நடத்தி வந்த கடையில் மேற்கொண்ட சோதனையில் விற்பனைக்காக பதுக்கி வைக்கப்பட்டிருந்த அரசால் தடை செய்யப்பட்ட சுமார் 268 கிலோ குட்கா போதை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது.
மேலும் திருப்பத்தூர் தாலுக்கா காவல் நிலையதிற்குட்பட்ட வெங்களாபுரம் பகுதியில் ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த பிந்து குமார் (24) என்பவர் நடத்தி வந்த கடையில் சோதனை மேற்கொண்டதில் சுமார் 80 கிலோ குட்கா பொருட்கள் கைப்பற்றப்பட்டது.
இதே போல் நாட்டறம்பள்ளி காவல் நிலையத்திற்குட்பட்ட கேத்தாண்டப்பட்டி பகுதியைச் சேர்ந்த பூவரசன்(28) என்பவர் நடத்தி வந்த கடையில் சோதனை மேற்கொண்டதில் சுமார் 81 கிலோ போதை பொருட்கள் கைப்பற்றப்பட்டு கடத்தலுக்கு பயன்படுத்திய இருசக்கர வாகனம் மற்றும் ஒரு கார் பறிமுதல் செய்யப்பட்டது.
இதே போல் ஜோலார்பேட்டை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட வக்கணம்பட்டி பகுதியைச் சேர்ந்த ஜெயகுமார் (48 ) என்பவர் நடத்தி வந்த கடையில் சுமார் 400 கிராம் குட்கா போதை பொருட்கள் கைப்பற்றப்பட்டது.
இதே போல் திருப்பத்தூர் நகர காவல் நிலையத்திற்குட்பட்ட தண்டபாணி கோயில் தெரு பகுதியைச் சேர்ந்த 1.லட்சுமணன் (55), 2.பிரசாந்த்குமார் (31), 3.அல்லா பக்ஷ் (29) (தலைமறைவு) ஆகிய மூன்று பேர் நடத்தி வரும் மளிகை கடையில் சோதனை மேற்கொண்டதில் சுமார் 23 கிலோ குட்கா போதை பொருட்கள் கைப்பற்றப்பட்டது.
தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா பொருட்களை பதுக்கி வைத்து விற்பனை செய்த குற்றவாளிகளை கைது செய்யப்பட்டு அவர்கள் மீது வழக்கு பதிவு செய்து நீதமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.
மேலும் தனிப்படை குழுக்களின் சோதனை நடவடிக்கைகள் தொடர்ந்து நடைபெறும்.
திருப்பத்தூர் மாவட்டத்தில் போதைப்பொருள் கடத்தல் மற்றும் விற்பனை செய்தல் போன்ற குற்ற செயல்களில் ஈடுபடும் நபர்கள் மீது வழக்கு பதிவு செய்தல், அவர்களின் வங்கி கணக்கு முடக்குதல், நீதிமன்ற காவலுக்கு உட்படுத்துதல் போன்ற கடுமையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
ஆகையால் பொதுமக்கள் தங்கள் பகுதிகளில் போதைப்பொருள் கடத்தல், பதுக்கி விற்பனை செய்தல் குறித்த தகவல்களை 91599 59919 என்ற தொலைபேசி எண்ணில் தெரிவித்து போதை பொருள் இல்லாத மாவட்டத்தை உருவாக்க காவல்துறையுடன் இணைந்து செயல்பட வேண்டும். தகவல் கொடுப்போரின் விவரம் ரகசியம் பாதுகாக்கப்படும் என திருப்பத்தூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஷ்ரேயா குப்தா தெரிவித்துள்ளார்.