முதல்-அமைச்சரின் மண்ணுயிர் காத்து மண்ணுயிர் காப்போம் திட்டத்தில் வட்டாரத்திற்கு ஒரு கிராமம் தேர்வு செய்யப்பட்டு உயிர்ம வேளாண்மைக்கான மாதிரி பண்ணை திடல் அமைக்கப்படுகிறது.அதன்படி உடுமலை வட்டாரம் வாளவாடி கிராமத்தில் நடராஜன் என்ற விவசாயியை தேர்வு செய்து திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.இது குறித்து வேளாண்மை உதவி இயக்குனர் தேவி கூறுகையில், இயற்கை இடுபொருட்கள், பூச்சி விரட்டிகள் தயாரிப்பதற்கான மூலப் பொருட்கள் மற்றும் உபகரணங்கள்,பெயர் பலகை அமைத்தல்,உயிர் உரங்கள் உயிர்ம வேளாண்மை சான்று பெறுவதற்கான ஊக்கத்தொகை போன்றவற்றுக்கு ரூ.10 ஆயிரம் வழங்கப்படுகிறது.விவசாயி நடராஜன் மீன் அமிலம், பஞ்சகவ்யா,ஜீவாமிர்தம்,பூச்சி விரட்டி,வேப்பங்கொட்டை கரைசல்,தொல்லியல் கரைசல் ஆகியவை தயாரித்து செயற்கை பூச்சிக்கொல்லிகளை பயன்பாட்டை தவிர்த்து வருகிறார்.இதன்மூலம் பயிர் சாகுபடியில் உற்பத்தி செலவு குறைகிறது மண்ணின் நலம் பாதுகாக்கப்படுகிறது.
மீன் அமிலம்
மீன் கழிவு 10 கிலோ, கரும்புச் சர்க்கரை 12 கிலோ மற்றும் 2 லிட்டர் கரும்புச்சாறு கலந்து காற்று புகாதவாறு 30 நாட்கள் மூடி நொதிக்க வைத்து மீன் அமிலம் தயாரிக்க வேண்டும். 30 மில்லி சாற்றினை 10 லிட்டர் தண்ணீரில் கலந்து பயிர் மீது தெளிக்கும்போது தழைச்சத்து கிடைக்கிறது.மேலும் ஒரு ஏக்கருக்கு 3 லிட்டர் சாரினை சொட்டுநீர் பாசனம் மூலமும் பயன்படுத்தலாம்.
பஞ்சகவ்யா
மாட்டு சாணம் 10 கிலோ,அரை லிட்டர் நெய்யுடன் கலந்து 5 நாட்கள் மூடி வைக்க வேண்டும். பின்னர் பால் 2 லிட்டர்,தயிர் 2 லிட்டர், சர்க்கரை 2 கிலோ, மாட்டு கோமியம் 3 லிட்டர், வாழைப்பழம் 10 கலந்து தினசரி காலை மாலை இரண்டு நேரமும் நன்கு கலந்து 30 நாட்கள் நொதிக்க வைக்க வேண்டும். பின்னர் வடிகட்டி 10 லிட்டர் தண்ணீருக்கு 30 மில்லி சாறு வீதம் இருப்பதால் மணிச்சத்து கிடைக்கிறது.
ஜீவாமிர்தம்
10 மாட்டு சாணம்,10 லிட்டர் மாட்டு கோமியம், 4 கிலோ கரும்புச்சக்கரை,மண் ஒரு கைப்பிடி மற்றும் பயறு வகைகள் ஊறவைத்த ஆட்டிய மாவு 4 கிலோ கலந்து 2 நாட்கள் கலக்கி நொதிக்க வைக்க வேண்டும். பின்னர் இந்த சாற்றினை 10 லிட்டருக்கு தண்ணீரில் 50 மில்லி கலந்து தெளிப்பதன் மூலம் பயிர் ஊக்கியாகவும் செயல்படுகிறது.
பூச்சிவிரட்டி
நொச்சி இலை,ஆடாதோடை இலை, காட்டாமணக்கு, வேம்பு, சீதா, துளசி,அரப்பு, நிலவேம்பு, துத்தி,எருக்கம் இலை உள்ளிட்ட 10 இலைகளை தலா அரை கிலோ வீதம் 10 லிட்டர் மாட்டு கோமியத்தில் 15 நாட்கள் கலந்து ஊற வைக்க வேண்டும். பின்னர் 10 லிட்டர் தண்ணீருக்கு 200 மில்லி கரைசலை கலந்து தெளிக்க வேண்டும்.
இதே போன்று இயற்கை உயிர்ம கரைசல்கள் தயாரித்து பயன்படுத்த அனைத்து விவசாயிகளும் மாதிரி திடலை பயன்படுத்த வேண்டும் இவ்வாறு தெரிவித்தார்.
உடுமலை : நிருபர் : மணி