செப் 5, கன்னியாகுமரி
நாகர்கோவில் அருகே ஜஸ் கேஸ் நிறுவனத்தில் பரபரப்பு – தீயணைப்பு படையினர் அவசர நடவடிக்கை
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அருகே பாலாஸ் பகுதியில் இயங்கி வரும் ஒரு தனியார் ஜஸ் கேஸ் நிறுவனத்தில் இன்று அதிகாலை திடீரென கேஸ் கசிவு ஏற்பட்டது. துர்நாற்றம் பரவியதால் அருகிலுள்ள குடியிருப்புகள் மற்றும் வணிக நிறுவனங்களில் மக்கள் பீதி அடைந்தனர்.
தகவல் அறிந்து உடனடியாக சம்பவ இடத்துக்கு விரைந்த தீயணைப்பு படையினர், கேஸ் கசிவை கட்டுப்படுத்தும் நடவடிக்கையில் ஈடுபட்டனர். பல மணி நேரம் முயற்சி மேற்கொண்டதன் பிறகு கசிவை அடக்கி, பெரும் விபத்து நிகழாமல் தவிர்த்தனர்.
இந்த சம்பவத்தால் அப்பகுதி முழுவதும் பரபரப்பு நிலவியது. மக்கள் தங்கள் வீடுகளை விட்டு வெளியேறி பாதுகாப்பான இடங்களில் தஞ்சமடைந்தனர். சம்பவ இடத்தில் போலீசாரும் கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுகளை மேற்கொண்டனர்.
இதனை தொடர்ந்து, அப்பகுதி பொதுமக்கள் அந்த ஜஸ் கேஸ் பிளாண்டை மக்கள் குடியிருப்பு மத்தியில் செயல்படுவதை எதிர்த்து வலியுறுத்தினர். கேஸ் கசிவு போன்ற சம்பவங்கள் உயிர்பாதுகாப்புக்கு பெரும் அச்சுறுத்தலாக உள்ளதால் பிளாண்டை அப்புறப்படுத்த வேண்டும் என வலியுறுத்தி மக்கள் அதிகாரிகளுடன் வாக்குவாதத்திலும் ஈடுபட்டனர்.
தற்போது சம்பவம் தொடர்பாக அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
குமரி மாவட்ட செய்தியாளர் பாவலர் ரியாஸ்.
