திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த தெக்குபட்டு பகுதியை சேர்ந்தவர் யுவராஜ். இவர் புத்துக்கோவில் பகுதியில் ஜெயஆஞ்சநேயா ஆட்டோ கன்சல்டிங் என்ற பெயரில் பழைய இருசக்கர வாகனங்களை வாங்கி விற்பனை செய்யும் தொழில் செய்து வருகிறார். இவர் நேற்று முன்தினம் இரவு 7 மணி அளவில் கடையை மூடிவிட்டு வீட்டிற்கு சென்றுள்ளார். இந்நிலையில் நள்ளிரவில் கடையின் மேல்மாடி வழியாக கடைக்குள் நுழைந்த கொள்ளையர்கள், கடையில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமிராவின் ஒயர்களை துண்டித்து கடையில் வைத்திருந்த ரூபாய் 4 லட்சம் பணத்தை கொள்ளையடித்து சென்றுள்ளனர்.

பின்னர் நேற்று காலை யுவராஜ் கடைக்கு வந்த போது கடையில் வைத்திருந்த 4 லட்சம் ரூபாய் பணம் கொள்ளையடிக்கப்பட்டிருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்து, கடையின் மேல் தளத்தில் சென்று பார்த்த போது, மேல்மாடியில் உள்ள கதவின் வழியாக கொள்ளையர்கள் உள்ளே நுழைந்து சிசிடிவி கேமிரா ஓயர்களை துண்டித்து பணத்தை கொள்ளையடித்துச் சென்றது தெரியவந்துள்ளது,
சம்பவம் குறித்து யுவராஜ் அம்பலூர் காவல்நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற அம்பலூர் காவல்துறையினர் மற்றும் கைரேகை நிபுணர்கள் கொள்ளை நடந்த கடையில் ஆய்வு செய்தனர்.
சம்பவம் குறித்து அம்பலூர் காவல்துறையினர் வழக்குபதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
அப்சர் மர்வான் திருப்பத்தூர் மாவட்ட செய்தியாளர்.