நாகர்கோவில், டிசம்பர் 04, 2025:
கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோவில் வேப்பமூடு சந்திப்பில் 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் சார்பில் இன்று (வியாழக்கிழமை) மாபெரும் சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது. தடையை மீறி போராட்டத்தில் ஈடுபட்ட 63 பேரை காவல்துறையினர் கைது செய்தனர்.
போராட்டத்தின் பின்னணி:
திமுக அரசு அளித்த வாக்குறுதிகளை இதுவரை நிறைவேற்றவில்லை என்று குற்றம் சாட்டி, மாநிலம் தழுவிய அளவில் அரசு ஊழியர்கள் பல்வேறு போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக, நாகர்கோவில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகிலுள்ள வேப்பமூடு சந்திப்பில் இந்த மறியல் போராட்டம் நடைபெற்றது.
போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் பின்வரும் கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினர்:
- பழைய ஓய்வூதியத் திட்டம்: பங்களிப்பு ஓய்வூதியத் திட்டத்தை (CPS) ரத்து செய்துவிட்டு, மீண்டும் பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும்.
- காலிப்பணியிடங்கள்: அரசுத்துறைகளில் காலியாக உள்ள லட்சக்கணக்கான பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும்.
- அகவிலைப்படி நிலுவை: நிறுத்தி வைக்கப்பட்டுள்ள அகவிலைப்படி (DA) நிலுவைத் தொகையை உடனடியாக வழங்க வேண்டும்.
- சத்துணவு/அங்கன்வாடி ஊழியர்கள்: சத்துணவு மற்றும் அங்கன்வாடி ஊழியர்களுக்கு காலமுறை ஊதியம் வழங்க வேண்டும்.
- சாலைப் பணியாளர்களின் 41 மாத பணி நீக்க காலத்தை வரன்முறைப்படுத்த வேண்டும்.
வேப்பமூடு சந்திப்பில் அனுமதியின்றி மறியலில் ஈடுபட்ட சங்க நிர்வாகிகள் மற்றும் ஊழியர்களை காவல்துறையினர் அப்புறப்படுத்தினர். இதில் சுமார் 63 பேர் கைது செய்யப்பட்டனர். கைது செய்யப்பட்ட அனைவரும் அருகில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். மாலையில் அவர்கள் விடுவிக்கப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
கேமராமேன் ஜெனீருடன் குமரி மாவட்ட தலைமை நிருபர் பாவலர் ரியாஸ்.
