ஐக்கிய நாடுகள் சபையானது நடப்பு ஆண்டான 2025னை அகில உலக கூட்டுறவு ஆண்டாக அறிவித்துள்ளது. இதனை தொடர்ந்து உலகம் முழுவதும் கூட்டுறவு இயக்கங்கள் வாயிலாக பல்வேறு சமூக செயல்பாடுகள் நடைபெற்று வருகிறது. இதன் ஒரு பகுதியாக நீலகிரி மாவட்டத்தில் கோத்தகிரி வட்டத்தில் அமைந்துள்ள நீலகிரி கூட்டுறவு விற்பனைச் சங்க திருமண மண்டபத்தில் இன்று ஜூன் 13-ம் தேதி நீலகிரி மாவட்ட கூட்டுறவுத்துறை மற்றும் தி ஐ ஃபவுண்டேஷன் இணைந்து நடத்தும் இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது.
இந்த முகாமில் கூட்டுறவுத்துறை அலுவலர்கள், கூட்டுறவு சங்க பணியாளர்கள், நியாய விலைக் கடை விற்பனையாளர்கள் மற்றும் அவர்களது குடும்ப உறுப்பினர்களுக்கு இலவச கண் பரிசோதனை முகாம் நடத்தப்பட்டது. கண் பரிசோதனையுடன் சிறு பார்வை குறைபாடு உள்ளவர்களுக்கு இலவசமாக கண் கண்ணாடி வழங்கப்பட்டது, மேலும் கண் மற்றும் வழங்கப்பட்ட கண் கண்ணாடி பராமரிப்பு குறித்த ஆலோசனையும் வழங்கப்பட்டது.
இந்த முகாமினை நீலகிரி மண்டல கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் திரு. இரா. தயாளன் அவர்கள் துவங்கி வைத்தார். இதில் 70 க்கும் மேற்பட்ட கூட்டுறவு சங்கப் பணியாளர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினர் கலந்து கொண்டு பரிசோதனை செய்து பயனடைந்தனர். முகாமில் கூட்டுறவு சார்பதிவாளர்கள் திரு. கோவிந்தராஜன், திரு. சுப்பிரமணி, கூட்டுறவு ஒன்றிய பணியாளர்கள், பார்வை மருத்துவர் திருமதி. ஆனந்தி, மக்கள் தொடர்பு அலுவலர் (தி ஐ ஃபவுண்டேஷன்) பாபு, செவிலியர் திருமதி. கலைவாணி ஆகியோர் கலந்து கொண்டனர்.
