Headlines

திருநெல்வேலியில் நடைபெற்ற அரசு விழாவில், 235 கோடியே 94 லட்சம் ரூபாய் மதிப்பிலான, 33 முடிவுற்ற திட்டப்பணிகளை திறந்து வைத்தும், 356 கோடியே 59 லட்சம் ரூபாய் மதிப்பிலான, 11 புதிய திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டியும், பல்வேறு துறைகளின் சார்பில், 45,477 பயனாளிகளுக்கு 101 கோடியே 49 லட்சம் ரூபாய் மதிப்பிலான அரசு நலத்திட்ட உதவிகளையும், 50 புதிய பேருந்துகளை இயக்கி வைத்தும், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரையாற்றினார்!

திருநெல்வேலியில் நடைபெற்ற அரசு விழாவில், 235 கோடியே 94 லட்சம் ரூபாய் மதிப்பிலான, 33 முடிவுற்ற திட்டப்பணிகளை திறந்து வைத்தும், 356 கோடியே 59 லட்சம் ரூபாய் மதிப்பிலான, 11 புதிய திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டியும், பல்வேறு துறைகளின் சார்பில், 45,477 பயனாளிகளுக்கு 101 கோடியே 49 லட்சம் ரூபாய் மதிப்பிலான அரசு நலத்திட்ட உதவிகளையும், 50 புதிய பேருந்துகளை இயக்கி வைத்தும், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரையாற்றினார்!

திருநெல்வேலி,டிச.21:-
தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று ( டிசம்பர்.21) காலையில், பாளையங்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மைதானத்தில் நடைபெற்ற, பிரம்மாண்டமான அரசு விழாவில் பங்கேற்று, 694.02 கோடி ரூபாய் மதிப்பிலான பல்வேறு நலத்திட்டங்களை தொடங்கி வைத்தும், புதிய பணிகளுக்கு அடிக்கல் நாட்டியும் உரையாற்றினார். சுமார் 30 ஆயிரம் பேர் பங்கேற்ற இந்த விழாவில், 45,477 பயனாளிகளுக்கு 101 கோடியே 49 லட்சம் ரூபாய் மதிப்பிலான அரசு நலத்திட்ட உதவிகளையும், முதலமைச்சர் வழங்கினார்.

அத்துடன் 50 புதிய பேருந்துகளையும் அவர் இயக்கி வைத்தார். முன்னதாக, விழாவிற்கு வருகை தந்த முதல்வருக்கு, காவல் துறையினரின் “அணிவகுப்பு மரியாதை” அளிக்கப்பட்டது. இதனை ஏற்றுக்கொண்ட முதல்வர், மாவட்ட ஆட்சியர் சுகுமார் மற்றும் அமைச்சர்களின் வரவேற்புடன், மேடைக்கு வருகை தந்தார்.

தமிழகத்தின் தொன்மை நாகரிகத்தை உலகிற்கு பறைசாற்றும் வகையில், திருநெல்வேலி ரெட்டியார்பட்டியில் அமைக்கப்பட்டுள்ள “பொருநை” அருங்காட்சியகத்தை நேற்று திறந்து வைத்ததை சுட்டிக்காட்டிய அவர், “தமிழனாக, நான் இதில் பெரும் பெருமை கொள்கிறேன்!” என்றார்.

ஆதிச்சநல்லூர் அருங்காட்சியக பணிகளை முடக்கி வைத்துள்ள, ஒன்றிய அரசுக்கு கண்டனம் தெரிவித்த முதல்வர், “பிரதமர் மோடியும், நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனும் இங்கு வந்து, தமிழர்களின் நாகரீகத்த பார்த்து, தெரிந்துகொள்ள வேண்டும்!” என அழைப்பு விடுத்தார்.

இத்திட்டத்தை சிறப்பாக செயல்படுத்திய, அமைச்சர்கள் கே.என்.நேரு, தங்கம் தென்னரசு, எ.வ.வேலு மற்றும் அரசு முதன்மை செயலாளர் த.உதயச்சந்திரன் ஆகியோருக்கு, அவர் பாராட்டுகளை தெரிவித்தார்.

திருநெல்வேலி மக்களுக்கான, முக்கிய அறிவிப்புகளை வெளியிட்ட முதல்வர், “நெல்லையப்பர் கோயிலில் நீண்ட காலமாக முடங்கிக் கிடந்த வெள்ளித் தேர், தற்போது சரி செய்யப்பட்டு, இன்னும் சில நாட்களில் ஓடும்!” என்ற மகிழ்ச்சியான செய்தியைப் பகிர்ந்து கொண்டார்.

“ராணி அண்ணா அரசு மகளிர் கல்லூரி வளாகத்தில், 11 கோடி ரூபாய் செலவில் மகளிர் தங்கும் விடுதி கட்டும் பணிகள், 4 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கன்னடியன் கால்வாய் மேம்பாட்டு திட்டப்பணிகள் மற்றும் 5 கோடி ரூபாய் மதிப்பில் வள்ளியூரான் கால்வாய் சீரமைப்பு பணிகள் ஆகியன, விரைவில் மேற்கொள்ளப்படும்!” என்ற, மூன்று முக்கிய புதிய அறிவிப்புகளையும், முதலமைச்சர் வெளியிட்டார்.

திருநெல்வேலிக்கு அடையாளமாக, நெல்லையப்பர் கோயில், வற்றாத தாமிரபரணி ஜீவநதி ஆகியவற்றுடன், இனி பொருநை அருங்காட்சியகமும் திகழும்! என, அவர் பெருமிதத்துடன் குறிப்பிட்டார்.

அரசியல் ரீதியாக பா.ஜ.க மற்றும் அ.தி.மு.க. மீது, கடும் விமர்சனங்களை முன்வைத்த முதல்வர், ஏழைகளின் வாழ்வாதாரமான 100 நாள் வேலைவாய்ப்பு திட்டத்தை பா.ஜ.க அரசு திட்டமிட்டு முடக்கி வருவதாக குற்றம் சாட்டினார்.

நிதி ஒதுக்கீட்டை குறைத்து, ஊதியம் தராமல், வேலை நாட்களை சுருக்கி, ஏழை குடும்பங்களின் வயிற்றில், ஒன்றிய அரசு அடித்து வருவதாக சாடிய முதலமைச்சர், இதனை எதிர்த்து வருகிற 24-ஆம் தேதி தமிழகம் முழுவதும் திமுக சார்பில் மிகப்பெரிய ஆர்ப்பாட்டம் நடத்தப்படும்! என்றும், அறிவித்தார்.

தன்னை விவசாயி என்று சொல்லிக்கொள்ளும் எடப்பாடி பழனிச்சாமி, பாஜக அரசுக்கு துணை போவதாகவும், போராடுபவர்களை ‘புரோக்கர்’ என விமர்சிப்பதாகவும் கூறியதுடன், அது மிகவும் கண்டிக்கத்தக்கது! என்றும் தெரிவித்தார்.

திராவிட மாடல் ஆட்சியின், சாதனைகளை பட்டியலிட்ட முதலமைச்சர், மகளிர் இலவச பேருந்து பயணம் மூலம், நெல்லையில் மட்டும் தினமும் 1.83 லட்சம் பேர் பயனடைவதாகவும், மகளிர் உதவித்தொகை உள்ளிட்ட திட்டங்கள் மக்களின் வாழ்வை மேம்படுத்தி வருவதாகவும், கூறினார்.

எத்தனை நெருக்கடிகள் வந்தாலும், “தமிழகம் முன்னேறிய மாநிலமாக திகழும்!” என உறுதி அளித்த அவர், “அடுத்து அமையப்போவதும், நமது ஆட்சிதான். திராவிட மாடல் 2.0-வில் இன்னும் மகத்தான திட்டங்கள் வரும்!” என முழக்கமிட்டு, தன்னுடைய உரையை நிறைவு செய்தார். இந்த விழா, நெல்லை மாவட்டத்தின் வளர்ச்சிப் பாதையில், புதியதோர் மைல்கல்லாக அமைந்திருந்தது! என்பது குறிப்பிடத்தக்கதாகும்! விழாவில், சபாநாயகர் மு. அப்பாவு, அமைச்சர்கள் கே.என். நேரு,எ.வ.வேலு, கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன், தங்கம் தென்னரசு, கீதாஜீவன், மா. சுப்பிரமணியன், மனோ தங்கராஜ், ராஜ கண்ணப்பன், எம்.பி.க்கள் தூத்துக்குடி கனிமொழி, தென்காசி (தனி)ராணி குமார், திருநெல்வேலி ராபரட் புரூஸ், எம்.எல்ஏ.க்கள் பாளையங்கோட்டை மு. அப்துல் வகாப், நாங்குநேரி ரூபி ஆர். மனோகரன், மாவட்ட ஆட்சியர் இரா. சுகுமார் உட்பட பலர், கலந்து கொண்டனர்.

விழாவில் உரையாற்றிய முதல்வர் மு.க.ஸ்டாலின், “நமது தலைவர் கலைஞர் அவர்கள் சிறையில் அடைக்கப்பட்ட, இதே பாளையங்கோட்டை மண்ணில், இன்று நான் நின்று கொண்டிருக்கிறேன்!” என்று உணர்ச்சி பூர்வமாக தன்னுடைய பேச்சை தொடங்கினார்.

திருநெல்வேலி செய்தியாளர்: “மேலப்பாளையம்” ஹஸன்

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *