செப் 23 கன்னியாகுமரி
நாகர்கோவில் மாநகரத்தில் போக்குவரத்து நெரிசல், பாதுகாப்பு மற்றும் பொதுமக்கள் நலன் தொடர்பான பிரச்சினைகளை தீர்க்கும் நோக்கில், நாகர்கோவில் உட்கோட்ட உதவி காவல் கண்காணிப்பாளர் டாக்டர். திரு. லலித் குமார்., இ.கா.ப தலைமையில், வணிக வளாக உரிமையாளர்கள் மற்றும் நிர்வாகிகளுடன் சிறப்பு கலந்துரையாடல் இன்று மாலை நாகர்கோவில் உட்கோட்ட காவல் அலுவலகத்தில் நடைபெற்றது.
இந்தக் கூட்டத்தில், வணிக வளாகங்களுக்குச் செல்லும் வாடிக்கையாளர்கள் தங்கள் வாகனங்களை வளாகம் முன்பாகவே சாலையில் நிறுத்துவதால் ஏற்படும் போக்குவரத்து தடைகள் குறித்து விரிவான விவாதம் நடத்தப்பட்டது. பொதுமக்கள் சிரமப்படாத வகையில், வணிக வளாக உரிமையாளர்கள் தங்களுக்கென தனிப்பட்ட பார்க்கிங் இடங்களை உருவாக்கி, வாகனங்கள் அவற்றில் மட்டுமே நிறுத்தப்பட வேண்டும் என்று உதவி காவல் கண்காணிப்பாளர் வலியுறுத்தினார்.
மேலும், பார்க்கிங் இடங்களை சிலர் பொருள் சேமிப்பு கிடங்காக மாற்றி பயன்படுத்தி வருவது முற்றிலும் தவறானது எனவும், இப்படிப்பட்ட நடவடிக்கைகள் எதிர்காலத்தில் கண்டறியப்பட்டால் கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரிக்கப்பட்டது.
அத்துடன், வணிக வளாகங்களின் உள் மற்றும் வெளிப்புறங்களில் அவசியம் சி.சி.டி.வி. கேமராக்கள் பொருத்தப்பட்டு, 24 மணி நேரமும் கண்காணிப்பு நடைபெற வேண்டும் எனவும், வளாகங்களுக்குள் தீ விபத்து ஏற்படாமல் தடுக்க தீயணைப்பு பாதுகாப்பு கருவிகள் கட்டாயம் பொருத்தப்பட வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டது.
இதற்கிடையில், வணிக வளாகங்களில் பணியமர்த்தப்படும் நபர்கள் குறித்து, அவர்களின் குற்றப் பின்னணிகளை சரிபார்த்த பிறகே வேலைக்கு அமர்த்தப்பட வேண்டும் என்று காவல் அதிகாரி தெரிவித்தார்.
இக்கலந்துரையாடலில் கலந்து கொண்ட வணிக வளாக உரிமையாளர்கள், காவல் துறை வழங்கிய ஆலோசனைகள் மற்றும் உத்தரவுகளை முழுமையாக பின்பற்றுவோம் என உறுதியளித்தனர்.
இந்தக் கூட்டத்தில் காவல் துறையினரும், வணிக வளாக நிர்வாகிகளும் பெருமளவில் பங்கேற்றனர். இதன் மூலம் நாகர்கோவில் நகரில் போக்குவரத்து சீர்செய்யப்பட்டு, பொதுமக்களின் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்படும் என்ற நம்பிக்கை உருவாகியுள்ளது.
கேமராமேன் ஜெனீருடன் குமரி மாவட்ட செய்தியாளர் பாவலர் ரியாஸ்.
