பழனியை அடுத்துள்ள நெய்க்காரப்பட்டி பேரூராட்சிக்கு உட்பட்ட பெரியகலையம்புத்தூரில் ஒவ்வொரு ஆண்டும் பொங்கல் பண்டிகையையொட்டி ஜல்லிக்கட்டு போட்டி நடத்தப்படுவது வழக்கம்.
அங்குள்ள ஐ கோர்ட் பத்திரகாளியம்மன் கோவில் வாடிவாசலில் பாரம்பரிய முறைப்படி காளைகளை அவிழ்த்துவிடப்பட்டு இந்த ஜல்லிக்கட்டு நடத்தப்பட்டு வருகிறது.
அதன்படி இந்த ஆண்டிற்கான ஜல்லிக்கட்டுப் போட்டி மாவட்ட ஆட்சியரின் அனுமதியுடன் நடைபெறுவதற்கான ஏற்பாடுகளை ஊர் பொதுமக்கள் செய்து வருகின்றனர். இந்நிலையில் ஜல்லிக்கட்டு போட்டி நடத்துவதற்கான ஆலோசனை கூட்டம் பெரியகலையம்புத்தூர் ஐ கோர்ட் பத்ரகாளியம்மன் கோவிலில் நேற்று நடந்தது.
கூட்டம் முடிந்து ஜல்லிக்கட்டு போட்டி நடத்துவதற்கான அறிவிப்பை கிராம கமிட்டி நிர்வாகிகள் வெளியிட்டனர்.
அதில் வருகின்ற 17 ஆம் தேதி ( சனிக்கிழமை ) உழவர் திருநாள் அன்று ஜல்லிக்கட்டு போட்டி நடத்துவது என்றும், திண்டுக்கல், தேனி, மதுரை, திருச்சி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து 600-க்கும் மேற்பட்ட காளைகள் போட்டியில் கலந்து கொள்ள உள்ளதாகவும் 500க்கும் மேற்பட்ட மாடுபிடி வீரர்கள் கலந்து கொள்வார்கள் என்றும் தெரிவித்தனர்.
