கோத்தகிரி மலைவாழ் மக்கள் பெரும் பல நோக்கு கூட்டுறவு சங்கத்தின் செயல் எல்லையில் அமைந்துள்ள குஞ்சப்பனை கிராமத்தில் உறுப்பினர் கல்வித்திட்டத்துடன், மகளிர் சுய உதவிக் குழு கடன் வட்டி மானியம் மற்றும் மரக்கன்றுகள் நடும் விழா ஆகிய முப்பெரும் விழா நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சிக்கு நீலகிரி மண்டல கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் தஇரா. தயாளன்தலைமை வகித்தார். அப்போது பேசுகையில் இச்சங்கமானது மலைவாழ் மக்களுக்கு என அவர்களது சமூக, பொருளாதார முன்னேற்றத்தை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டு அமைக்கப்பட்ட சிறப்பு வகை சங்கம் ஆகும். இச்சங்கத்தின் வாயிலாக மகளிர் சுய உதவி குழு கடன், விவசாய கடன், சிறு வணிக கடன், கறவை மாடு வாங்குவதற்கான கடன், கால்நடை பராமரிப்பு கடன், கூட்டுப் பொறுப்புக் குழு கடன் உள்ளிட்ட பல்வேறு கடன்களை வழங்கி அதன் மூலம் அவர்களது சமூக பொருளாதார நிலையினை மேம்பாடு அடைய செய்து வருகிறது என்று கூறினார். பின்னர் நான்கு மகளிர் சுய உதவி குழுக்களுக்கு உரிய தவணை காலத்திற்குள் கடன் தொகையை செலுத்தியதற்காக வட்டி மானியத்தினை சம்பந்தப்பட்ட குழுக்களுக்கு திரும்ப வழங்கினார். தற்போது வரை, கடன் பெற்று உரிய தவணை காலத்திற்குள் திருப்பி செலுத்திய மகளிர் சுய உதவி குழு கடன்களுக்கான வட்டி மானியமானது அந்தந்த குழுக்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது எனவும் கூறினார்.
முன்னதாக சங்கத்தின் நிர்வாக குழு தலைவர் திரு சிவலிங்கம் வரவேற்புரை ஆற்றினார் நீலகிரி மாவட்ட கூட்டுறவு ஒன்றியத்தின் செயலாட்சியர் திரு ரா. கௌரிசங்கர் உறுப்பினர் கல்வி திட்டத்திற்கான நோக்கம் குறித்தும், சங்கத்தில் உறுப்பினர்களின் பங்களிப்பு எவ்வாறெல்லாம் இருக்க வேண்டும் என்பது குறித்தும் எடுத்துரைத்தார். அடுத்தபடியாக முன்னாள் ஆசிரியர் திரு. சிவகுமார், மகளிர் சுய உதவி குழு உறுப்பினர் திருமதி. சித்திரலேகா ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.
தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்கள் மற்றும் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியின் மூலமாக வழங்கப்படும் கடன்கள் மற்றும் சேவைகள் குறித்து சரக மேற்பார்வையாளர் திர பால்முருகன் விரிவாக எடுத்துரைத்தார். நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக கிராமத்தின் மைதானத்தை சுற்றி மண்டல இணைப்பதிவாளர் மற்றும் உறுப்பினர்களால் மரக்கன்றுகள் நடப்பட்டன. நிகழ்ச்சியின் இறுதியாக சங்கத்தின் மூத்த உறுப்பினர் திரு. ரங்கசாமி நன்றி கூறினார் நிகழ்ச்சியில் கூட்டுறவு சங்க பணியாளர்கள் உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
