Headlines

திருநெல்வேலியில் அனைத்து அரசியல் கட்சிகள் மற்றும் அனைத்து அமைப்புகளின் பிரதிநிதிகள் பங்கேற்ற, ஆலோசனை கூட்டம்! மாவட்ட ஆட்சியர், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பங்கேற்பு!

திருநெல்வேலியில் அனைத்து அரசியல் கட்சிகள் மற்றும் அனைத்து அமைப்புகளின் பிரதிநிதிகள் பங்கேற்ற, ஆலோசனை கூட்டம்! மாவட்ட ஆட்சியர், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பங்கேற்பு!

திருநெல்வேலி,ஜன.9:-திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், புதன்கிழமை [ ஜனவரி.8] மாலையில், பல்வேறு அரசியல் கட்சிகள் மற்றும் அமைப்புகளின் பிரதிநிதிகளுடன், மாவட்ட ஆட்சித் தலைவர் டாக்டர் கா.ப.கார்த்திகேயன் தலைமையில், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் நை.சிலம்பரசன், திருநெல்வேலி மாநகர காவல் துணை ஆணையாளர் வி. கீதா சேரன்மகாதேவி சார் ஆட்சியர் அர்பித் ஜெயின், நாங்குநேரி உட்கோட்ட உதவி காவல் கண்காணிப்பாளர் பிரசன்னகுமார் மற்றும் அலுவலர்கள் முன்னிலையில், ஆலோசனைக்கூட்டம் நடைபெற்றது.

உயர்நீதிமன்ற வழிகாட்டுதலின்படி பொதுக்கூட்டம், ஆர்ப்பாட்டம், உண்ணாவிரதம் உள்ளிட்டவற்றை நடத்துவதற்கான, இடங்களை தேர்ந்தெடுப்பது, அனுமதிக்கப்படாத இடங்களில் நிகழ்வுகளை நடத்துவது, சுவரொட்டிகள் ஒட்டுவது, பதாகைகள் வைப்பது ஆகியவற்றை தவிர்ப்பது போன்றவை குறித்து, இந்த கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது. மாவட்டத்தில் உள்ள அனைத்து தரப்பினரிடையேயும், நல்லிணக்கமான சூழல் நிலவச்செய்வதை உறுதி செய்திட ஒத்துழைக்க வேண்டும்! சமூக வலைத்தளங்களில், பொது அமைதியை சீர்குலைக்கும் வகையில் பதிவுகள் மேற்கொள்வதை தவிர்க்க வேண்டும்! அரசு சார்பிலான விழிப்புணர்வு ஏற்படுத்தும் நடவடிக்கைகளுக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும்! சமூகங்களிடையே பூசல்களை ஏற்படுத்தும் செயல்களால் மாவட்டத்தின் வளர்ச்சி, பொருளாதார மேம்பாடு, வணிகம், மக்களின் வாழ்வாதாரம் உள்ளிட்ட அனைத்தும் பாதிக்கப்படும் என்பதால், இளைஞர்கள் தவறான பாதையில் செல்வதை தடுக்க வேண்டும்! அனைத்து இயக்கங்களும் பொதுமக்களுக்கு உரிய வழிகாட்டுதல்களை வழங்கிட வேண்டும்!- என, இந்த கூட்டத்தின் வாயிலாக, கேட்டுக் கொள்ளப்பட்டது.

பொதுமக்களுக்கு எவ்வித பாதிப்பும் இல்லாதவாறு, போக்குவரத்திற்கு இடையூறு ஏற்படாமல் ஜனநாயக முறைப்படி பொதுக்கூட்டம், ஆர்ப்பாட்டம், உண்ணாவிரதம் போன்ற நிகழ்வுகளை நடத்திட, அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி நடக்க வேண்டும்!-போன்ற தகவல்கள், இந்த கூட்டத்தில், தெரிவிக்கப்பட்டது. அதன்படி, சேரன்மகாதேவி சார் ஆட்சியர் தலைமையிலும், திருநெல்வேலி கோட்டாட்சியர் தலைமையிலும், கோட்ட அளவில் இத்தகைய கூட்டங்கள் நடத்தப்பட்டன.மாவட்ட அளவிலான கூட்டத்தில், பேரணிகள் நடத்துவதற்காக, தேர்வு செய்யப்பட்டுள்ள இடங்கள் குறித்து, தாலுகா வாரியாக எடுத்துரைக்கப்பட்டது.

அதுபோல கோட்ட அளவிலான கூட்டத்தில், பரிந்துரைக்கப்பட்ட இடங்கள் தவிர, வேறு இடங்கள் ஏதேனும் இருப்பின், 13.1.2025 திங்கட்கிழமைக்குள் பரிந்துரைக்கலாம்! எனவும், அவையும் பரிசீலிக்கப்பட்டு தகுந்த இடமாக இருந்தால், பட்டியலில் சேர்க்கப்படும்! எனவும் தெரிவிக்கப்பட்டது. விளம்பர பதாதைகள் அமைக்க, தொடர்புடைய காவல் நிலையங்களில், “தடையின்மை சான்று” பெற்ற பிறகு, மாநகர பகுதிகளுக்கு மாநகராட்சி அலுவலகத்திலும், பிற பகுதிகளுக்கு சம்பந்தப்பட்ட உள்ளாட்சி அமைப்புகளிடமும், உரிய கட்டணம் செலுத்தி, அனுமதி பெற்று கொள்ளலாம்! சாலை சந்திப்புகள், மையத்தடுப்புகள், வழிபாட்டுத்தலங்கள், அரசு கட்டிடங்கள் ஆகியவற்றிலும், நடைபாதைகளை மறித்தும், விளம்பரங்கள் அமைக்கக் கூடாது! அவற்றை, தனியார் இடங்களின் அருகே அமைக்கும் பொழுது, இட உரிமையாளர்களிடம் அனுமதி பெற்றுக் கொள்ள வேண்டும்! பொதுமக்களுக்கும், போக்குவரத்திற்கும் இடையூறு இல்லாமல், அவற்றை அமைப்பதை உறுதி செய்திட வேண்டும்! பொதுமக்களிடையே, அதிருப்தியை ஏற்படுத்தும் வகையில் சுவரொட்டிகள் ஒட்டுவதை தவிர்த்திடவும், கேட்டுக் கொள்ளப்பட்டது.

அரசு மற்றும் அரசு சார்ந்த கட்டிடங்கள், சாலை மையத்தடுப்புகள் போன்ற இடங்களில் சுவரொட்டிகள் ஒட்டுவது முற்றிலுமாக தடை செய்யப்பட்டுள்ள விபரம் தெரிவிக்கப்பட்டது.
இவ்வாறு தடை செய்யப்பட்ட பகுதிகளில், சுவரொட்டிகள் ஒட்டும் நபர்கள் மற்றும் அச்சகங்கள் மீது, வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்கப்படும்! என்றும், தெரிவிக்கப்பட்டது.

திருநெல்வேலி மாவட்டத்தில், குற்றங்கள் குறைந்துள்ள நிலையில், சமூக வலைத்தளங்களில், ஆர்வமிகுதியாலும் தவறான வழிகாட்டுதல்களாலும், சமூக பூசல்களை ஏற்படுத்தும் வகையில், பதிவுகள் போடுவதை அனைத்து இயக்கங்களும் கடுமையாக கண்டித்திட வேண்டும்! எனவும், இது தொடர்பாகவும் இளைஞர்களுக்கு அறிவுரைகளை வழங்கிட வேண்டும்! எனவும், இந்த கூட்டத்தில் கேட்டுக் கொள்ளப்பட்டது.

இந்த கூட்டத்தில், திருநெல்வேலி கோட்டாட்சியர் கண்ணா கருப்பையா, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) காசி, அனைத்து காவல் துணை கண்காணிப்பாளர்கள், வட்டாட்சியர்கள், காவல்துறை அலுவலர்கள், அரசியல் கட்சிகள் மற்றும் அமைப்புகளின் பிரதிநிதிகள் உட்பட, பலர் கலந்து கொண்டார்கள்.

திருநெல்வேலி மாவட்ட செய்தியாளர் “மேலப்பாளையம்” ஹஸன்

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *