திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் அடுத்துள்ள கணியூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட துங்காவி கிராமத்தில், காவல்துறையினர் சார்பில் பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் குற்றத் தடுப்பு குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி மிகச்சிறப்பாக நடைபெற்றது.
மாவட்ட காவல் கண்காணிப்பாளர் யாதவ் கிரிஷ் அசோக் IPS உத்தரவின் பேரில், உடுமலைப்பேட்டை காவல் துணை கண்காணிப்பாளர் திரு. நமச்சிவாயம் DSPன் நேரடி மேற்பார்வையில் இந்த விழிப்புணர்வு முகாம் ஒருங்கிணைக்கப்பட்டது.
கணியூர் காவல் ஆய்வாளர் பஞ்சுலட்சுமி தலைமையில், உதவி ஆய்வாளர் கார்த்திக் குமார் மற்றும் காவலர் சிவகுருநாதன் ஆகியோர் துங்காவி கிராம மக்களிடையே விரிவான ஆலோசனைகளை வழங்கினர்.
விழிப்புணர்வின் ஆலோசனையின் போது பொதுமக்களிடம் சிசிடிவி கேமராக்களை வீடுகள் மற்றும் வணிக நிறுவனங்களில் பொருத்துவதன் மூலம் குற்றச் செயல்களைத் தடுக்கவும், குற்றவாளிகளைக் கண்டறியவும் முடியும்.
அந்நிய நபர்கள் நடமாட்டம் சந்தேகத்திற்கு இடமான முறையில் புதிய நபர்கள் யாரேனும் தென்பட்டால் உடனடியாகக் காவல்துறைக்குத் தகவல் தெரிவிக்க வேண்டும். பெண்கள் தனியாகச் செல்லும் போது பின்பற்ற வேண்டிய பாதுகாப்பு வழிமுறைகள் குறித்து விளக்கப்பட்டது.
வெளியூர்களுக்குச் செல்லும் போது வீட்டைப் பூட்டிச் செல்வது குறித்து முன்கூட்டியே காவல் நிலையத்திற்குத் தகவல் தெரிவிப்பதன் அவசியம் வலியுறுத்தப்பட்டது.
இந்த ஆலோசனைக்கூட்டத்தில் கலந்து கொண்ட பொதுமக்கள் நெகிழ்ச்சியுடன் தெரிவித்ததாவது.. தங்கள் கிராமத்திற்கே வந்து பாதுகாப்பு குறித்து இவ்வளவு விரிவாக விளக்கம் அளித்த கணியூர் காவல்துறையினருக்கு துங்காவி கிராம மக்கள் மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொண்டனர்.
இத்தகைய விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் குற்றமில்லா சமுதாயத்தை உருவாக்கப் பெரிதும் உதவும் என சமூக ஆர்வலர்கள் பாராட்டு தெரிவித்துள்ளனர்.
