கன்னியாகுமரி மாவட்டம்:-
சர்வதேச மலைகள் தினத்தை முன்னிட்டு, கன்னியாகுமரி வனவிலங்கு சரணாலய மாவட்ட வன அலுவலர் மற்றும் வன உயிரின காப்பாளர் முனைவர் அன்பு இ.வ.ப. அவர்களின் உத்தரவின்பேரில், பூதப்பாண்டி வனச்சரக அலுவலர் அன்பழகன் தலைமையில் 11.12.2025 அன்று செண்பகராமன்புதாரில் உள்ள கலைவாணர் என்.எஸ்.கே பாலிடெக்னிக் கல்லூரி வளாகத்தில் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.
ஓய்ஸ்கா அமைப்புடன் இணைந்து, அதன் மாநில தலைவர் நல்லப்பெருமாள் மற்றும் வன உயிரின ஆய்வாளர் பேராசிரியை சுதாமதி அவர்களின் ஒருங்கிணைப்பில், கல்லூரியின் நாட்டு நலப்பணி திட்ட மாணவர்கள் பங்கேற்புடன் செண்பகராமன் பகுதியில் மலைகளின் முக்கியத்துவம் மற்றும் பாதுகாப்பு குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பேரணி நடத்தப்பட்டது.
முன்னதாக நடைபெற்ற கூட்டத்தில் வன அலுவலர் அன்பழகன் அவர்கள் பேசுகையில், மேற்கு தொடர்ச்சி மலைத்தொடர் இந்தியாவின் மிக முக்கியமான பல்லுயிர் சூழல் அமைப்புகளில் ஒன்றாக விளங்கிவரும் என்றும், இங்கு காணப்படும் தனிப்பட்ட தாவர–விலங்கு இனங்கள் உலகளவில் அரியவை என்றும் குறிப்பிட்டார்.
ஓய்ஸ்கா மாநில தலைவர் நல்லப்பெருமாள் பேசும்போது, மலை மற்றும் வன பாதுகாப்பில் சமூகப் பங்களிப்பு மிக அவசியமெனவும், பள்ளிகள், தன்னார்வ அமைப்புகள், பொதுமக்கள் குழுக்கள் இணைந்து செயல்பட வேண்டியது காலத்தின் தேவை என்றும் குறிப்பிட்டார்.
மேற்கு தொடர்ச்சி மலைகளை பாதுகாப்பது எதிர்கால தலைமுறைகளின் நலனுக்கான அடித்தளமெனவும் அவர் வலியுறுத்தினார்.
வன உயிரின ஆய்வாளர் சுதாமதி அவர்கள் உரையில், மேற்கு தொடர்ச்சி மலைகளின் பல்லுயிர்ப்பெருக்கம், அங்கு வாழும் உள்ளூர் இனங்கள், அவை எதிர்கொள்ளும் சவால்கள் குறித்து விரிவாக விளக்கினார்.
மனிதச் செயற்பாடுகள், காலநிலை மாற்றம், மற்றும் வனச்சேதம் இந்தச் சூழலியலை கடுமையாக பாதிக்கின்றன எனவும் கூறினார்.
இந்நிகழ்ச்சியில் கல்லூரி முதல்வர் நாகலிங்கம், ஐ.டி.ஐ. முதல்வர் வேலன், நாட்டு நலப்பணி திட்ட ஒருங்கிணைப்பாளர் மணியன், வனக்காப்பாளர் முத்துக்குமார், வனக்காவலர் ராஜேஷ் மற்றும் சிவா ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
தமிழக விடியல் செய்திகளுக்காக கேமராமேன்: ஜெனீருடன்
குமரி மாவட்ட நிருபர்: பாவலர் ரியாஸ்.
