Headlines

ஹரியும் சிவனும் ஒன்னு ! அறியாதவர்கள் வாயில் மண்ணு !

ஹரியும் சிவனும் ஒன்னு

என பாமர மக்கள் கூட சொல்ல கேட்டிருப்போம்.
சிவாலயத்தில் தீயில் வெந்த நீரும்.., விஷ்ணு ஆலயத்தில் குளிர்ந்த நீர் தீர்த்த துளசியும் தருகிறார்களே அது ஏன்.? என்றாவது நாம் சிந்தித்து உண்டா.?
சிவனுக்கு வில்வம் சூடு , விஷ்ணுவுக்கு துளசி குளிர்ச்சி , நம் உடம்பில் கூட பாதிக்கும் மேல் நீர் அம்சம்தான் உடலை இயக்கும். சக்தியாகிய உயிரோ நெருப்பம்சம்.!
அடுப்பிலே நெருப்பு! மேலே பானையில் நீர் ! நீருக்கும் நெருப்புக்கும் நேரடியாக தொடர்பு இல்லை. நீரும் , நெருப்பும் சேர்ந்தால் தானே ஆக்கம். ( எப்படி , இரவும் , பகலும் இணைந்து நாள் முழுமையாகிறதோ அதுபோல தான்! )
எந்த வார்த்தையும் மேலோட்டமாக பார்க்காமல் உள் ஆழத்தையும் பார்க்க வேண்டும். நமது முன்னோர்கள் ஆழ்ந்த ஞானத்தோடுதான் ஹரியும் , சிவனும் ஒண்ணு என்பதை உணர்ந்து சொல்லியிருக்கிறார்கள்.
பல்வேறு புராண சம்பவங்களையும் நமக்கு அளித்திருக்கிறார்கள்.!

தைத்திர்ய ஆரண்யம் என்னும் நூலில் திருமாலின் இருதய மத்தியில் சிவன் இருக்கிறார் என சொல்லப்பட்டுள்ளது. விஷ்ணு சகஸ்ரநாமத்தில் கயிலாயத்தில் சிவபெருமான் எப்பொழுதும் ராமநாமத்தை சொல்லிக்கொண்டே இருக்கிறார் என்று சொல்கிறது. ஸ்ரீமத் பாகவதத்தில் குருஷேத்ர யுத்தத்திற்கு காரண பூதராய் அழித்தல் தொழிலை திருமால் செய்ததாக தெரிவிக்கிறது. கண்ணன் தன் சிவயோக மகிமையால் சிவபெருமானாகவே இருந்ததாகவும் சொல்லப்படுகிறது. இதுவே கிருஷ்ண அவதாரம்.

அஷ்டாட்சரமும் , பஞ்சாட்சரமும் ஒரே இடத்தில் தான் ஐக்கியமாகி உள்ளது. இவற்றை உணர்ந்து கொண்டால் ஆன்மிக ஞானமும் , மோட்ஷமும் கிடைக்கும்.!
இப்படி பல சிறப்பு அம்சங்களை கொண்ட ஆலயம் திருப்பூர் மாவட்டம் , மடத்துக்குளம் வட்டம், காரத்தொழுவு கிராமத்தில் அருள்மிகு ஸ்ரீ சங்கரநாராயண ஸ்வாமி திருக்கோயில் அமைந்துள்ளது.

கோவில் ஏன் காரத்தொழுவு கிராமத்தில் அமையப்பெற்றுள்ளது என்ற உங்கள் மனதில் எழுந்த கேள்விகளுக்கு இதோ விளக்கம் கொடுக்கிறார் துளசி ஐயர் ( காளி உபாஷகர் )
நமது காரத்தொழுவு கிராமத்தின் சிறப்பம்சம்.!
துவாபர யுகத்தில் நடந்த மஹாபாரதத்தில் பஞ்சபாண்டவர்கள் 12 ஆண்டுகள் வனவாசம் முடிந்து ஒரு வருட காலம் அஞ்ஞான வாசம் ( தலைமறைவு வாழ்க்கை ) வாழ அவர்கள் தேர்ந்தெடுத்த விராடபுரம் தான் இன்றைய தாராபுரம், ஏனென்றால் விராடபுரத்தில் தான் அடர்ந்த காடுகளும் நீர் நிலைகளும் , வன்னி மரங்களும் நிறைந்த காரணத்தினால் இங்கு தங்குவதற்கு சிறந்த இடமாக கருதி அதனை தேர்ந்தெடுத்தார்கள். விராடபுர நுழைவாயிலில் உள்ள வன்னி மரத்தில் தான் அர்ஜுனன் தனது ஆயுதங்களை வைத்து பாதுகாத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

விராட் ராஜனின் பசுத்தொழுவம் தான் நமது காரத்தொழுவு , மேலும் நமது ஊரில்தான் தந்திபாலன் எனும் திருநாமத்தோடு சகாதேவன் பசுக்களையெல்லாம் பராபரித்துக் கொண்டிருந்தார்.

பஞ்சபாண்டவர்களில் சகாதேவனின் தனிச்சிறப்பு.!
மஹாபாரதத்தில் கண்ணன் தருமரின் வேண்டுகோளை ஏற்று தூது சொல்ல புறப்படுகிறார். அப்போது பாண்டவர் ஐவரிடமும் சண்டையா ? சமாதானமா ? என்று கேட்கிறார். தருமர் மட்டுமே சமாதானம் என்கிறார். பீமன் , அர்ஜுனன் , நகுலன் மூவரும் சண்டைதான் வேண்டும் என்கின்றனர். ஆனால் , சகாதேவன் மட்டும் எங்களை ஏன் கேட்கிறீர்கள்.? நீங்கள் என்ன நினைக்கிறீர்களோ அதுதானே நடக்கப்போகிறது.! அதனை செய்யுங்கள் என்கிறார்.

சகாதேவன் ஜோதிடத்தில் சிறந்தவன் என்பதால் , இவன் ஏதோ உள்அர்த்தம் வைத்து பேசுகிறான் – என்பதை உணர்ந்த கண்ணன் சகாதேவனை தனிமையில் அழைத்து பாரதபோர் வராமல் தடுக்க என்ன செய்யலாம்‌? – என்று கேட்டார்‌. உங்களை கட்டிப்போட்டால் பாரத யுத்தம் வராமல் தடுக்க முடியும் என்கிறார்.
எங்கே என்னை கட்டுபார்க்கலாம்.? என்று கண்ணன் பதினாராயிரம் வடிவம் கொண்டு நிற்கிறார். ஆயினும் சகாதேவன் தயங்கவில்லை. தன் மனதால் கண்ணனின் உண்மை வடிவத்தை கட்டுகிறார்‌. இதைக்கண்டு மகிழ்ந்த கண்ணன் , உனக்கு என்ன வரம் வேண்டும் எனக் கேட்டார். அதற்கு எங்கள் ஐவர் உயிரையும் , காத்தருள வேண்டும் என்கிறார். அவ்விதமே அருள் புரிகிறார் கண்ணன்.!

இப்படி ஜோதிடத்திலேயும் , பக்திலேயும் சிறந்து விளங்கிய கால கணித தத்துவ ஞானியான சகாதேவன் வாழ்ந்த ஊர் நமது காரத்தொழுவு கிராமம்.! மேலும்,
பாரத தேசத்தின் இருபெரும் இதிகாசங்களில் ஒன்றான மஹாபாரதம் நிகழ்ந்த இடமாகவும், அரும்பெரும் நூலான கீதையை உலகிற்கு தர காரணமாக இருந்த இடமாகவும், இந்த மண் பெருமை பெற்றிருக்கிறது.
இத்தகைய அருட்சக்தி மிகுந்த நிலத்தில் நமது அருள்மிகு ஸ்ரீ சங்கரநாராயணன் ஸ்வாமி திருக்கோயில் காரத்தொழுவு கிராமம் தெற்கு பகுதியில் வடக்கு திசை நோக்கி அமைந்துள்ளது. இந்த ஆலயத்தில் புரட்டாசி மாதம் மட்டுமல்லாது மஹாசிவராத்திரி , அமாவாசை , பெளர்ணமி , சங்கடஹர சதுர்த்தி, தேய்பிறை அஷ்டமி , லஷ்மி நரசிம்மருக்கு ஸ்வாதி , கார்த்திகை 1 முதல் தை 1 தேதி வரை நாள்தேறும் நெய் அபிஷேகம், குருப்பெயர்ச்சி, சனிப்பெயர்ச்சி , ஆண்டு விழாக்கள் நடைபெறும். இந்த நாட்களில் ஆலயம் சென்று வழிபடுவது சிறப்பு வாய்ந்த ஒன்றாகும்.!

வாருங்கள் பக்தர்களே அருள்மிகு ஸ்ரீ சங்கரநாராயண ஸ்வாமி அருள் பெறுவோம்.!

துளசி ஐயர்
காளி உபாஷகர்
தொடர்புக்கு : 87540 66766

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *