கன்னியாகுமரி, பிப் 7 :
கன்னியாகுமரி மாவட்டத்தில், விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில், கிறிஸ்தவ சம்பவர் சமூகத்தினருக்கு வழங்கப்பட்ட சாதி சான்றிதழ்களில் 2013 ஆம் ஆண்டு முதல் சாதி குறிப்பு பகுதியில் “மதம் மாறிய கிறிஸ்தவர்” என பதிவு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படும் விவகாரத்திற்கு எதிராக கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்த வகையான சாதி குறிப்பு மாற்றம், கல்வி, வேலைவாய்ப்பு மற்றும் இடஒதுக்கீடு உள்ளிட்ட துறைகளில் பாதிப்பை ஏற்படுத்தக்கூடும் என்ற அச்சம் சமூகத்தினரிடையே நிலவி வருவதாகவும், இதுகுறித்து மாவட்ட நிர்வாகம் மற்றும் வருவாய் துறை அதிகாரிகள் உடனடி விளக்கம் அளிக்க வேண்டும் என்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சி வலியுறுத்தியுள்ளது.
முன்னதாக வழங்கப்பட்ட சாதி சான்றிதழ்களில் இருந்த சமூகப் பெயர் மாற்றப்பட்டிருப்பது சமூக நீதிக்கும் அரசியலமைப்புச் சட்டத்திற்கும் எதிரானது எனக் கூறி, இந்த மாற்றத்தை திரும்பப் பெற வேண்டும் என்றும் கோரிக்கை விடுக்கப்பட்டது.

இந்த கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு இளஞ்சிறுத்தை எழுச்சி பாசறை ராஜாகமங்கல ஒன்றிய அமைப்பாளர் ஆல்வின் ஜோன்ஸ் தலைமை வகித்தார்.
விடுதலை சிறுத்தைகள் கட்சி கன்னியாகுமரி சட்டமன்றத் தொகுதி மாவட்ட செயலாளர் கோபி பேரறிவாளன், மண்டல செயலாளர் பாஸ்கர் பகலவன், மண்டல துணைச் செயலாளர் டேவிட்ஸ் மேரி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
விடுதலை சிறுத்தைகள் கட்சியின் இளஞ்சிறுத்தை எழுச்சி பாசறை மாநில செயலாளர் முரசு தமிழப்பன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு, “சாதி சான்றிதழ்களில் இவ்வாறு மேற்கொள்ளப்படும் மாற்றங்கள் சமூக நீதி அடிப்படைகளுக்கு எதிரானவை. இது உடனடியாக திரும்பப் பெறப்பட வேண்டும்” என்று கண்டன உரையாற்றினார்.
மேலும் விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் நாகர்கோவில் மாநகர மாவட்ட செயலாளர் நாஞ்சிலரசு(எ)சௌத்ரி, பத்மநாபபுரம் தொகுதி மாவட்ட செயலாளர் மேசியா, குளச்சல் தொகுதி மாவட்ட செயலாளர் சுபாஷ், கருத்தியல் பரப்புரை மாநில துணைச் செயலாளர் கோட்டார் யூசுப் உள்ளிட்டோர் உரையாற்றினர்.
இதில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மகளிர் விடுதலை இயக்க மாநிலச் செயலாளர் கலைச்செல்வி,
கன்னியாகுமரி தொகுதி செயலாளர் சிறுத்தை தாஸ், நில உரிமை மீட்பு இயக்க மாவட்ட பொறுப்பாளர் ராஜன், நாஞ்சில் துரை, ஊடகப் பொறுப்பாளர்கள் யுவன் ராஜன் மற்றும் பொதுமக்கள் பலரும் கலந்து கொண்டனர்.
தமிழக விடியல் செய்திகளுக்காக கேமராமேன் ஜெனீருடன்
குமரி மாவட்ட தலைமை நிருபர் பாவலர் ரியாஸ்.
