கொடைக்கானல், பூண்டி : ஜூலை 24
கொடைக்கானல் மேல்மலைப் பகுதியான பூண்டி ஊராட்சி நிர்வாகத்தின் எல்லைக்குட்பட்ட பூண்டி பேருந்து நிறுத்தம் அருகே, பொதுமக்கள் அதிகம் நடமாடும் முக்கியப் பகுதியில் அமைக்கப்பட்டிருந்த குடிநீர் குழாய் உடைந்து கடந்த பல மாதங்களாகத் தண்ணீர் வீணாகச் சாலையில் பாய்ந்து கொண்டிருக்கிறது.
அரசுச் சொத்தான இக்குடிநீர் விநியோகக் கட்டமைப்பு சீரமைக்கப்படாமல் கைவிடப்பட்டுள்ளதால், தினமும் பல நூறு லிட்டர் சுத்தமான குடிநீர் வீணாகி வருகிறது. இது தொடருமானால், வரும் காலங்களில் பூண்டி பகுதி மக்களுக்குக் கடுமையான குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் உருவாகியுள்ளது.
இதுமட்டுமன்றி, பூண்டி ஊராட்சியின் பல்வேறு இடங்களிலும் குடிநீர் குழாய்கள் உடைந்து தண்ணீர் வீணாவது தொடர்கதையாகி வருகிறது. குடிநீர் விநியோகக் குழாய்களில் ஏற்படும் கசிவுகளையும் உடைப்புகளையும் கண்டு கொள்ளாமல் ஊராட்சி நிர்வாகம் காட்டி வரும் அலட்சியப் போக்கு அப்பகுதி மக்களிடையே கடும் கொந்தளிப்பையும் மனக்கசப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
சுத்தமான குடிநீர் கிடைக்காமல் மக்கள் அல்லல்படும் வேளையில், குடிநீர் இப்படிச் வீணாகச் சாலையில் பாய்வதைக் கண்டு பொதுமக்கள் வேதனை அடைகின்றனர். பொதுமக்களை வீதிக்கு வந்து போராடும் நிலைக்குத் தள்ளாமல், தகுந்த அதிகாரிகள் உடனடியாகத் தலையிட்டு பேருந்து நிறுத்தம் அருகே உடைந்த குழாய் உட்பட ஊராட்சியின் பல இடங்களில் வீணாகும் குடிநீர் கசிவுகளைப் போர்க்கால அடிப்படையில் சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இணை ஆசிரியர் : நா.ராஜாமணி – 8973350663
