Headlines

மின்வயர் மாற்றும் பணியில் விபத்து: மின்வாரிய ஊழியர் தீவிர சிகிச்சையில்.

மின்வயர் மாற்றும் பணியில் விபத்து: மின்வாரிய ஊழியர் தீவிர சிகிச்சையில்

தேரோட்டத்தையொட்டி மின்பாதையை மாற்றியமைத்தபோது சம்பவம்; தவெக நிர்வாகிகள் நேரில் சென்று ஆறுதல்

நாகர்கோவில் கோட்டார் ஏழகர பெருமாள் கோவில் தேரோட்டத்தையொட்டி, தெருவீதிகளில் உள்ள மின்வயர்களை பாதுகாப்பாக மாற்றியமைக்கும் பணியில் ஈடுபட்டிருந்த மின்வாரிய ஊழியர் ஒருவர் எதிர்பாராத மின்விபத்தில் சிக்கி, மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார்.

தேரோட்டம் நடைபெற்ற பகுதியில் நேற்று காலை மின்வயர்களை மாற்றியமைக்கும் பணியில், தெங்கம்புதூர் பகுதியைச் சேர்ந்த மின்வாரிய ஊழியர் அரவிந்த் ஈடுபட்டிருந்தார். அப்போது எதிர்பாராதவிதமாக உயர் அழுத்த மின்கம்பி மீது மற்றொரு கம்பி பட்டதாகக் கூறப்படுகிறது.

இதில் மின்சாரம் தாக்கி அரவிந்த் தூக்கி வீசப்பட்டு மயங்கி விழுந்தார். உடனடியாக அவரை மீட்டு அருகிலுள்ள மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

சம்பவம் குறித்த தகவல் அறிந்த தமிழக வெற்றிக் கழகத்தின் கன்னியாகுமரி கிழக்கு மாவட்டச் செயலாளர் எஸ்.ஆர். மாதவன், இணைச் செயலாளர் பிரேம்குமார் மற்றும் தொழிலதிபர் பால்ராஜ் ஆகியோர் மருத்துவமனைக்கு நேரில் சென்று அரவிந்தின் உடல்நிலை குறித்து கேட்டறிந்தனர்.

மேலும், அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்த அவர்கள், அரவிந்த் விரைவில் குணமடைய வாழ்த்தினர்.

கோவில் தேரோட்டம் போன்ற முக்கிய நிகழ்வுகளின்போது, பொதுமக்கள் பாதுகாப்பை கருத்தில் கொண்டு மின்பாதைகளை மாற்றியமைக்கும் பணிகள் மேற்கொள்ளப்படுவது வழக்கம். இந்நிலையில், பணியின்போது ஏற்பட்ட இந்த விபத்து குறித்து உரிய விசாரணை மேற்கொள்ளப்பட வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது.

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *