‘Zero Accident Kumari’ இலக்கை முன்னிறுத்தி KAAVAL AI திட்டத்தின் இரண்டாம் கட்டத்தை தொடங்கி வைத்தார் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் R. ஸ்டாலின், IPS.
கன்னியாகுமரி மாவட்டத்தில் சாலை விபத்துகளை குறைத்து, போக்குவரத்து விதிமீறல்களை கட்டுப்படுத்தும் நோக்கில், KAAVAL AI – Automatic Traffic Violation Detection System திட்டம் மேலும் 10 முக்கிய இடங்களுக்கு விரிவுபடுத்தப்பட்டுள்ளது. இந்தத் திட்டத்தை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் R. ஸ்டாலின், IPS, புதன்கிழமை (29.07.2026) வடசேரியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் அதிகாரப்பூர்வமாக தொடங்கி வைத்தார்.
‘Zero Accident Kumari’ என்ற இலக்கின் அடிப்படையில் செயல்பட்டு வரும் மாவட்ட காவல்துறை, செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை பயன்படுத்தி போக்குவரத்து ஒழுங்கை மேம்படுத்தும் முயற்சிகளை தொடர்ந்து மேற்கொண்டு வருகிறது. புதியதாக வடசேரி, அப்டா மார்க்கெட், பார்வதிபுரம், செட்டிகுளம், அஞ்சுகிராமம், விவேகானந்தபுரம், கருங்கல், அழகிய மண்டபம், திருத்துவபுரம் மற்றும் தக்கலை ஆகிய இடங்களில் AI கண்காணிப்பு அமைப்புகள் நிறுவப்பட்டுள்ளன.
இந்த அமைப்புகள் போக்குவரத்து விதிமீறல்களை துல்லியமாகக் கண்டறிந்து, வாகனங்களின் பதிவு எண்களை உடனுக்குடன் டிஜிட்டல் திரையில் காட்சிப்படுத்தும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளன. விதிமீறலின் தன்மைக்கேற்ப தானியங்கி முறையில் அபராத நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படுகின்றன.
இந்தத் திட்டத்தின் முதல் கட்டம் கடந்த 8 ஜூன் 2026 அன்று நாகர்கோவில் மாவட்ட ஆட்சியர் அலுவலக ரவுண்டானாவில் தொடங்கப்பட்டது. அங்கு நிறுவப்பட்ட AI கேமராக்கள் இதுவரை 4,868 போக்குவரத்து விதிமீறல்களை பதிவு செய்துள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது. அதன்படி, சம்பந்தப்பட்ட வாகன ஓட்டிகளுக்கு விதிகளின்படி அபராதங்கள் விதிக்கப்பட்டுள்ளன.
திட்டம் நடைமுறைக்கு வந்த பிறகு, தலைக்கவசம் அணியும் வாகன ஓட்டிகளின் எண்ணிக்கை 90 சதவீதத்திற்கும் மேல் உயர்ந்துள்ளதாகவும், இதன் காரணமாக சாலை விபத்துகள் மற்றும் உயிரிழப்புகளின் எண்ணிக்கை குறையும் போக்கு காணப்படுவதாகவும் காவல்துறை கூறியுள்ளது.
நிகழ்ச்சியில் நாகர்கோவில் உட்கோட்ட காவல் துணைக் கண்காணிப்பாளர் இளஞ்செழியன், போக்குவரத்து காவல் ஆய்வாளர்கள், காவல்துறையினர் மற்றும் KAAVAL AI திட்டத்தை உருவாக்கி செயல்படுத்துவதில் கன்னியாகுமரி மாவட்ட காவல்துறையுடன் இணைந்து பணியாற்றிய சென்னை ராஜேஸ்வரி பொறியியல் கல்லூரி மாணவர்கள் பங்கேற்றனர். திட்டத்தின் வெற்றிக்கு பங்களித்த மாணவர்கள் மற்றும் பிற பங்களிப்பாளர்களுக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சான்றிதழ்கள் வழங்கி பாராட்டினார்.
சாலைப் பாதுகாப்பை தொழில்நுட்ப ஆதரவுடன் மேம்படுத்தி, விபத்துகளையும் உயிரிழப்புகளையும் குறைப்பதே ‘Zero Accident Kumari’ திட்டத்தின் முக்கிய நோக்கமாக இருப்பதாக காவல்துறை தெரிவித்துள்ளது.
தமிழக விடியல் செய்திகளுக்காக கேமராமேன் ஜெனீருடன்
குமரி மாவட்ட நிருபர் பாவலர் ரியாஸ்.
