பழனி சண்முகபுரம் நகராட்சி நடுநிலைப்பள்ளி முறையான பராமரிப்பும், போதிய ஆசிரியர் நியமனமும் இன்றி அழிவின் விளிம்பை நோக்கிச் சென்று கொண்டிருப்பது அப்பகுதி மக்களிடையேயும் முன்னாள் மாணவர்களிடையேயும் பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது.
தொழிலதிபர்கள், சிறந்த ஆசிரியர்கள் எனப் பல துறை சாதனையாளர்களை உருவாக்கிய வரலாற்றுச் சிறப்புமிக்க இந்தப் பள்ளியில், சில மாதங்களுக்கு முன்பு பணிபுரிந்த ஆசிரியர் ஒருவர் பணிநீக்கம் செய்யப்பட்டார். அதன்பின்னர், பள்ளிக்கு நிலையான தலைமை ஆசிரியர் இதுவரை நியமிக்கப்படவில்லை. தற்போது பொறுப்புத் தலைமை ஆசிரியரே அனைத்துப் பணிகளையும் கவனித்து வருகிறார். அவர் நிர்வாகப் பணிகளைச் செய்வாரா அல்லது மாணவர்களுக்குப் பாடம் நடத்துவாரா என்ற கேள்வி எழுந்துள்ளதால், குழந்தைகளின் கல்வி கேள்விக்குறியாகியுள்ளது.
நிர்வாகச் சீர்கேடு மற்றும் நகராட்சிப் பிரதிநிதிகளின் தலையீடுகளால் பள்ளியில் பயிலும் மாணவர்களின் எண்ணிக்கை படிப்படியாகக் குறைந்து வருகிறது. நகராட்சி ஆணையர், கவுன்சிலர்கள் மற்றும் மாவட்டக் கல்வி அலுவலர் ஆகியோர் இந்தப் பள்ளியின் அவலநிலையைக் கண்டுகொள்ளாமல் அலட்சியம் காட்டுவதாகப் பெற்றோர்கள் குற்றம்சாட்டுகின்றனர்.
“குழந்தைகளின் கல்விக்காக எந்த எல்லைக்கும் செல்லலாம்” என உத்தரவிட்டுள்ள மாண்புமிகு தமிழக முதலமைச்சர் திரு. ஜோசப் விஜய் அவர்களும், பள்ளிப் கல்வித்துறை அமைச்சரும் இதில் உடனடியாகத் தலையிட வேண்டும். பழனிக்கு அடிக்கடி வரும் அமைச்சர்களும் அதிகாரிகளும் இந்த நகராட்சிப் பள்ளியை நேரடியாக ஆய்வு செய்து, காலியாக உள்ள தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர் பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும். அழிவின் விளிம்பில் இருக்கும் இந்தப் பழமையான பள்ளியையும், ஏழை எளிய மாணவர்களின் எதிர்காலத்தையும் காப்பாற்ற மாவட்ட ஆட்சியரும், கல்வித்துறையும் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே பெற்றோர் மற்றும் பொதுமக்களின் தீவிர எதிர்பார்ப்பாகும்.
இணை ஆசிரியர் : நா.ராஜாமணி – 8973350663
