பழனி அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயிலில் வருடாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக கடந்த ஜூலை 20-ஆம் தேதி முதல் ரோப்கார் சேவை தற்காலிகமாக நிறுத்தப்பட்டு பராமரிப்புப் பணிகள் தொடங்கப்பட்டன.
ரோப்கார் இயக்கம் தொடர்பான அனைத்து இயந்திரங்களும் NDT பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டு, புதிய இயந்திரங்களை கொள்முதல் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டது. அதன்படி, ரோப்கார் இயக்கத்திற்கான சாஃப்ட் பழுது கண்டறியப்பட்டு, சுமார் 3 லட்சம் ரூபாய் மதிப்பிலான புதிய சாஃப்ட் கொல்கத்தாவிலிருந்து கொண்டுவரப்பட்டுள்ளது. அதனை NDT பரிசோதனை செய்யும் பணியும், கியர் பாக்ஸ் பராமரிப்பு பணியும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
புதிய சாஃப்ட் பொருத்தப்பட்டு சோதனை ஓட்டம் முடிந்த பிறகு, தயார் நிலையில் உள்ள புதிய பெட்டிகள் பொருத்தும் பணி நடைபெறும்.
மேலும், ரோப்கார் கீழ்நிலைய பெருந்திட்டப் பணிகளில் புதிய மேற்கூரை, ஃபால் சீலிங் அமைப்பு, பக்கவாட்டு சுவர்களில் கிரானைட் பதித்தல் போன்ற பணிகள் நடைபெற்று வருகின்றன.
ரோப்கார் இயந்திரங்கள் பராமரிப்பு பணி மற்றும் சிவில் மராமத்து பணிகள் அனைத்தும் வரும் செப்டம்பர் 12-ஆம் தேதிக்குள் நிறைவடைந்து, பக்தர்கள் பயன்பாட்டிற்கு ரோப்கார் இயக்கம் மீண்டும் தொடங்கும் என திருக்கோயில் இணை ஆணையர் செயல் அலுவலர் தெரிவித்துள்ளார்.
