திருநெல்வேலி,நவ.3:- வாக்காளர் பட்டியலில், சிறப்பு தீவிர திருத்தம் (SPECIAL INTENSIVE REVIEW – SIR) தொடர்பான பணிகள், நவம்பர்.4-ஆம் தேதி தொடங்கி, அடுத்த மாதம் (டிசம்பர்.4) முடிய நடைபெற உள்ள சூழ்நிலையில், இன்று (நவம்பர்.3) காலையில், நெல்லை “கொக்கிரகுளம்” பகுதியில் அமைந்துள்ள, மாவட்ட ஆட்சியர் அலுவலக சிறு கூட்ட அரங்கில், செய்தியாளர்கள் கூட்டத்தில் பேசினார்.
அப்போது, அவர் கூறிதாவது:- “திருநெல்வேலி மாவட்டத்தில் ஊரக பகுதியில் நாங்குநேரி, ராதாபுரம், அம்பாசமுத்திரம் ஆகிய 3 சட்டமன்ற தொகுதிகளும், மாநகர பகுதியில் திருநெல்வேலி, பாளையங்கோட்டை ஆகிய 2 சட்டமன்ற தொகுதிகளும் என, மொத்தம் 5 சட்டமன்ற தொகுதிகள் உள்ளன. இந்த 5 தொகுதிகளிலும் சேர்த்து, சென்ற மாதம் (அக்டோபர்) 27-ஆம் தேதி கணக்குப்படி, 6,91,026 ஆண் வாக்காளர்களும், 7,27,130 பெண் வாக்காளர்களும், 169 மூன்றாம் பாலின வாக்காளர்களும் என, தற்போது மொத்தம் 14,18,325 வாக்காளர்கள் உள்ளனர்.
இவர்களுக்கென, இம்மாவட்டத்தில் மொத்தம் 1490 வாக்குச்சாவடிகள் தயார் நிலையில் உள்ளன. இருப்பினும், 190 வாக்குச்சாவடிகள் புதிதாக அமைக்கப்பட உள்ளன.
45 வாக்குச்சாவடிகள் இடமாற்றமும், 6 வாக்குச்சாவடிகளில் பெயர் மாற்றமும், செய்யப்பட உள்ளன!”
இவ்வாறு, மாவட்ட ஆட்சித்தலைவர் சுகுமார், நிருபர்களிடம் தெரிவித்தார். முன்னதாக அவர், நவம்பர் 4- ஆம் தேதி முதல், 2026 ஜனவரி 31- ஆம் தேதி வரையிலான, சிறப்பு தீவிர திருத்தம் தொடர்பான பணிகளை, பட்டியலிட்டார். நிருபர்களுக்கு, “ஸ்மார்ட் கிளாஸ்” (SMART CLASS) காட்சிகள் மூலம், ஒவ்வொன்றும் விளக்கிக் கூறப்பட்டன! என்பது, இன்றைய செய்தியாளர்கள் கூட்டத்தின், “சிறப்பு அம்சம்” ஆகும்.
திருநெல்வேலி மாவட்ட செய்தியாளர்: “மேலப்பாளையம்” ஹஸன்.
