உடுமலை அடுத்த திருமூர்த்தி மலை அமணலிங்கேஸ்வரர் கோவிலில் பிரம்மா, சிவன், விஷ்ணு உள்ளிட்ட மும்மூர்த்திகள் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலித்து வருகிறார்கள்.அத்துடன் மலை மீது உடுமலை வனச்சரகத்தின் அடர்ந்த வனப்பகுதியில் பஞ்சலிங்கங்களும் அமைந்து உள்ளது.பஞ்சலிங்கங்களை தரிசனம் செய்ய பிரதோஷ தினத்தன்று மற்றும் பக்தர்களுக்கு அனுமதி அளிக்கப்படுகிறது.
அதன்படி நேற்று புரட்டாசி மாத பிரதோஷத்தை முன்னிட்டு பஞ்சலிங்கங்களுக்கு பால், சந்தனம்,தயிர்,பன்னீர், இளநீர்,மஞ்சள்,விபூதி, அரிசி, மாவு, பஞ்சாமிர்தம் உள்ளிட்ட 16 வகையான பொருட்களைக் கொண்டு அபிஷேகம் செய்யப்பட்டது.அதைத் தொடர்ந்து சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளிய பஞ்சலிங்கேஸ்வரரை கோவில் அறங்காவலர் குழு தலைவர் ரவி உள்ளிட்ட பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.
இதே போன்று உடுமலை தில்லை நகர் ரத்தின லிங்கேஸ்வரர் கோவிலில் பிரதோஷத்தை முன்னிட்டு நந்தியம்பெருமான் ரத்தின லிங்கேஸ்வரருக்கு 16 வகையான பொருட்களைக் கொண்டு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.இதில் பக்தர்கள் கலந்து கொண்டு ஓம் நமசிவாய என்ற மந்திரத்தை கூறி சிவன் பாடல்களை பாடி தரிசனம் செய்தனர்.மேலும் ரத்தினலிங்கேஸ்வரர் ரத்தனாம்பிகை அம்மனுடன் பல்லக்கில் எழுந்தருளி கோவில் வளாகத்தில் மங்கள வாத்தியம்,சங்கொலி, கைலாச வாத்தியம் முழங்க உலா வந்து பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.உடுமலை பிரசன்ன கோவில் உள்ளிட்ட சிவாலயங்களில் பிரதோஷத்தை முன்னிட்டு சிறப்பு பூஜை நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.