திருநெல்வேலி புறநகர் மாவட்டம், களக்காடு அருகே மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதியில் அமைந்துள்ள, கொடுமுடியாறு அணையிலிருந்து, நடப்பு பிசானப்பருவ சாகுபடிக்காக, தமிழக சட்டமன்ற பேரவை தலைவர் [சபாநாயகர்] மு.அப்பாவு, தண்ணீர் திறந்து விட்டார். இன்று [டிச.18] முதல், அடுத்த ஆண்டு [2025] மார்ச் மாதம் 31-ஆம் தேதி முடிய, மொத்தம் 104 நாட்களுக்கு திறந்துவிடப்பட்டுள்ள இந்த தண்ணீரால், நாங்குநேரி மற்றும் ராதாபுரம் வட்டங்களில் உள்ள, வள்ளியூரான் கால்வாய், படலையார் கால்வாய், ஆத்துக்கால் மற்றும் வடமலையான் கால் ஆகியவற்றின் மூலம், 936.90 ஏக்கர் நிலங்கள் நேரடியாகவும், 44 குளங்கள் மூலம் 4844.01 ஏக்கர் நிலங்கள் என, மொத்தம் 5780.91 ஏக்கர் நிலங்கள், பாசனவசதி பெறும். நாங்குநேரி வட்டத்தில் 6 கிராமங்களும், ராதாபுரம் வட்டத்தில் 10 கிராமங்களும் என, மொத்தம் 16 கிராமங்கள், இந்த பாசனங்களால் பயன்பெறுகின்றன.
“பாசன விவசாயிகள், அணையின் நீரை மிகவும் சிக்கனமாக பயன்படுத்தி, நீர் விநியோகப் பணியில் நீர்வளத்துறைக்கு மிகுந்த ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்!”- என, தமிழக சபாநாயகர், விவசாயிகளை கேட்டுக் கொண்டார். தண்ணீர் திறப்பு நிகழ்ச்சியில், பொதுப்பணித்துறை கண்காணிப்பு பொறியாளர் சிவ குமார், செயற்பொறியாளர் தனலட்சுமி, உதவி செயற்பிறியாளர் மணிகண்டராஜன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
திருநெல்வேலி மாவட்ட செய்தியாளர் “மேலப்பாளையம்” ஹஸன்.