திருநெல்வேலி,அக்.29:
நெல்லை கொக்கிரகுளம் பகுதியில் உள்ள, மாவட்ட ஆட்சியர் அலுவலக சிறு கூட்ட அரங்கில், வாக்காளர் பட்டியல் தேர்தல் சிறப்பு தீவிர திருத்தம் மேற்கொள்ளுதல் தொடர்பாக, இந்திய தேர்தல் ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரமுகர்களுடன், ஆலோசனை கூட்டம் இன்று (அக்டோபர்.29) காலையில், நடைபெற்றது.
மாவட்ட தேர்தல் அலுவலரும், மாவட்ட ஆட்சித்தலைவருமான டாக்டர் இரா. சுகுமார், தலைமை வகித்தார். அப்போது பேசிய மாவட்ட ஆட்சித்தலைவர், “இந்திய தேர்தல் ஆணையத்தின் வழிகாட்டுதலின்படியும், சென்னை தலைமை தேர்தல் அலுவலர் மற்றும் அரசு செயலாளர் (பொதுத்தேர்தல்) அறிவுரையின் படியும், நமது திருநெல்வேலி மாவட்டத்தில், 01-01-2026 தேதியை தகுதி ஏற்படுத்தும் நாளாக கொண்டு, வாக்காளர் பட்டியலில் சிறப்பு தீவிர திருத்தத்தினை மேற்கொள்ள ஏதுவாக கால அட்டவணையினை, இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. அதன்படி அரசியல் கட்சியினர் நடந்து, வாக்காளர் பட்டியல் தேர்தல் சிறப்பு தீவிர திருத்தப்பணிகள் முழுமையாக நடைபெற, இப்பணிகளின் போது, அலுவலர்களுக்கு ஒத்துழைக்க வேண்டும்!
திருத்தங்கள் எல்லாம் நிறைவு பெற்றதற்கு பின்னர், இறுதி வாக்காளர் பட்டியல் 2026-ஆம் ஆண்டு, பிப்ரவரி மாதம் 7-ஆம் தேதி வெளியிடப்படும். உண்மையான வாக்காளர்கள், குறிப்பாக முதியவர்கள், நோய்வாய்ப் பட்டவர்கள், மாற்றுத்திறனாளிகள், ஏழைகள் மற்றும் பிறபாதிக்கப்படக்கூடிய நபர்களின் உதவிக்காக, தன்னார்வலர்கள் ( VULNERABLE GROUPS ) பயன் படுத்தப்படுவார்கள்!”- என்று, குறிப்பிட்டார்.
அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகள் சார்பாக, பாஜக, காங்கிரஸ், திமுக, அதிமுக, இந்திய கம்யூனிஸ்ட் உள்ளிட்ட பல்வேறு கட்சிகளின் பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.
அவர்கள் அனைவருக்கும் அட்டவணைகள் வழங்கப்பட்டன. அதிகாரிகள் தரப்பில், பாளையங்கோட்டை சட்டமன்ற தொகுதி வாக்காளர் பதிவு அலுவலரும், நெல்லை மாநகராட்சி ஆணையாளருமான டாக்டர் மோனிகா ராணா,மாவட்ட வருவாய் அலுவலர் மா. சுகன்யா, அம்பாசமுத்திரம் தொகுதி வாக்காளர் பதிவு அலுவலரும் சேரன்மகாதேவி சார் ஆட்சியருமான ஆயுஷ் குப்தா, திருநெல்வேலி தொகுதி வாக்காளர் பதிவு அலுவலரும், திருநெல்வேலி கோட்டாட்சியருமான எம். பிரியா, மாவட்ட ஆட்சித்தலைவரின் நேர்முக உதவியாளர் அனிதா, நாங்குநேரி தொகுதி வாக்காளர் பதிவு அலுவலரும், மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அலுவலருமான பாக்கியலட்சுமி, ராதாபுரம் தொகுதி தேர்தல் பதிவு அலுவலரும், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலருமான ராஜ செல்வி மற்றும் துணை வாக்காளர் பதிவு அலுவலர்கள், பங்கேற்றிருந்தனர்.
திருநெல்வேலி மாவட்ட செய்தியாளர் “மேலப்பாளையம்” ஹஸன்
