இளம் வாக்காளர்கள் உள்ளிட்ட அனைவரும் இறுதி வாக்காளர் பட்டியலில் இணைவதை வலியுறுத்தி மாவட்ட ஆட்சித்தலைவர் அழகுமீனா விழிப்புணர்வு நடவடிக்கைகள் துவக்கம்.
கன்னியாகுமரி மாவட்டத்திற்குட்பட்ட அனைத்து வாக்காளர்களும் 2026 இறுதி வாக்காளர் பட்டியலில் இடம்பெறுவதற்கான விழிப்புணர்வு நடவடிக்கைகளை மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி ஆர். அழகுமீனா, இ.ஆ.ப., அவர்கள் துவக்கி வைத்தார்கள்.
மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், “PROUD TO BE A VOTER – Selfie Point” அமைத்து பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. மேலும் அரசு வாகனங்களில் விழிப்புணர்வு ஸ்டிக்கர்கள் ஒட்டும் நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டன. இந்நிகழ்ச்சியில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. ஸ்டாலின், இ.கா.ப., அவர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
01.01.2026-ஐ தகுதி நாளாகக் கொண்டு 18 வயது பூர்த்தியான இளம் வாக்காளர்கள் மற்றும் 19.12.2025 அன்று வெளியிடப்பட்ட வரைவு வாக்காளர் பட்டியலில் இடம்பெறாத குடிமக்கள், 17.02.2026 அன்று வெளியிடப்படும் இறுதி வாக்காளர் பட்டியலில் இணைவதற்கான வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.
வரைவு வாக்காளர் பட்டியலில் பெயர் உள்ளதா என்பதை electoralsearch.eci.gov.in இணையதளத்தில் Search in Electoral Roll → Search by EPIC மூலம் சரிபார்க்கலாம் என்றும் அவர் கூறினார்.
கன்னியாகுமரி மாவட்டத்தில் வசிக்கும் 18 வயது பூர்த்தியான இளம் வாக்காளர்கள், தொகுதி மாற்றியவர்கள், இடம்பெயர்ந்தவர்கள் உள்ளிட்ட பெயர் சேர்க்கப்படாத அனைவரும், வரும் சனிக்கிழமை (03.01.2026) மற்றும் ஞாயிற்றுக்கிழமை (04.01.2026) ஆகிய நாட்களில் அனைத்து வாக்குச்சாவடிகளிலும் நடைபெறும் சிறப்பு முகாம்களில் விண்ணப்பிக்க வேண்டும் என்றார். விண்ணப்பிக்க கடைசி தேதி 18.01.2026 என்று தெரிவித்துள்ளார்.
பெயர் சேர்க்க விரும்புவோர் படிவம் – 6 மற்றும் Declaration Form, புகைப்படம் மற்றும் தேவையான ஆதார ஆவணங்களுடன் வாக்குச்சாவடி நிலை அலுவலரிடம் 18.01.2026க்கு முன்னதாக சமர்ப்பிக்க வேண்டுமெனவும், ஜனநாயக கடமையை நிறைவேற்ற அனைவரும் வாக்காளராக பதிவு செய்ய வேண்டும் எனவும் மாவட்ட ஆட்சித்தலைவர் அழைப்பு விடுத்தார்.
இந்நிகழ்ச்சியில் கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் திருமதி சிவகாமி, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் திருமதி சுகிதா, பேரூராட்சி உதவி இயக்குநர் திரு. பாண்டியராஜன், தேர்தல் வட்டாட்சியர் திரு. வினோத், அரசு அலுவலர்கள், பணியாளர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
தமிழக விடியல் செய்திகளுக்காக கேமராமேன் ஜெனீருடன்
குமரி மாவட்ட நிருபர் பாவலர் ரியாஸ்.
