திருநெல்வேலி,டிச.23:- திருநெல்வேலி புறநகர் மாவட்டம் மணிமுத்தாறு மற்றும் வடக்கு பச்சையாறு ஆகிய 2 அணைகளில் இருந்து, நடப்பு பிசானப்பருவ சாகுபடிக்காக, தமிழ்நாடு சட்டமன்ற பேரவை தலைவர் [சபாநாயகர்] மு.அப்பாவு மற்றும் தமிழக நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என். நேரு ஆகியோர், சிறப்பு பூஜைகளுக்கு பின்னர், தண்ணீரை திறந்து வைத்தனர். மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் கா.ப. கார்த்திகேயன் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சிக்கு, சேரன்மகாதேவி சார் ஆட்சியர் அர்பித் ஜெயின், திருநெல்வேலி நாடாளுமன்ற உறுப்பினர் சி.ராபர்ட் புரூஸ், சட்டமன்ற உறுப்பினர்கள் பாளையங்கோட்டை மு.அப்துல் வகாப், நாங்குநேரி “ரூபி” ஆர். மனோகரன், திருநெல்வேலி நயினார் நாகேந்திரன், தமிழக முன்னாள் சபாநாயகர் இரா. ஆவுடையப்பன், முன்னாள் அமைச்சர் டி.பி.எம். மைதீன் கான் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மணிமுத்தாறு அணையின், முன்னுரிமை பகுதிகளான 3-வது மற்றும் 4-வது ரீச்களை சார்ந்த 12,018 ஏக்கர் பாசன நிலங்கள் பயன் பெறும் வகையில், அடுத்த ஆண்டு [2025] மார்ச் மாதம் 31-ஆம் தேதி முடிய, மொத்தம் 99 நாட்களுக்கு, தினசரி வினாடிக்கு 100 கன அடிக்கு குறையாமல்,தண்ணீர் திறந்து விடப்படும்.
இதன் மூலம் திருநெல்வேலி மாவட்டத்தில் நாங்குநேரி, திசையன்விளை, தூத்துக்குடி மாவட்டத்தில்,ஸ்ரீ வைகுண்டம், ஏரல், சாத்தான்குளம் ஆகிய வட்டங்களை சார்ந்த 40 கிராமங்களும், 176 குளங்களும் பயன் பெறும். இதுபோல, நாங்குநேரி வட்டத்தில் உள்ள வடக்கு பச்சையாறு அணையில் இருந்தும் தண்ணீர் திறந்து விடப்பட்டது. இதன் மூலம் பச்சையாற்றின் குறுக்கே உள்ள முதல் 5 சிறிய அணைகள் மூலம் 9572.91 ஏக்கர் பாசன நிலங்களும், ஆயக்கட்டில் 4711.83 ஏக்கர் நிலங்களும், பாசன வசதி பெறும். இந்த அணை திறப்பு நிகழ்ச்சிகளில், நீர்வள ஆதாரத்துறை கண்காணிப்பு பொறியாளர் சிவ குமார், செயற்பொறியாளர்கள் தனலட்சுமி, வசந்தி, உதவி செயற்பொறியாளர்கள் ஆவுடையப்பன், தங்கராஜ் ஆகியோர், கலந்து கொண்டனர்.
திருநெல்வேலி மாவட்ட செய்தியாளர் “மேலப்பாளையம்” ஹஸன்