வாணியம்பாடி,ஆக.6- திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் முஹமத் பூரா முதல் தெருவில் வசித்து வருபவர் முபாரக் பாஷா. இவர் ஃபேன்சி ஸ்டோர் நடத்தி வருகிறார்.

இந்நிலையில் கடந்த 31 ஆம் தேதி பட்டப்பகலில் அவருடைய வீட்டிற்கு பர்தா அணிந்து சென்ற மர்ம நபர் திருமண பத்திரிக்கை கொடுக்க வந்ததாக கூறியுள்ளார்.
இதனை நம்பி வீட்டில் இருந்த முபாரக் பாஷாவின் மனைவி சுல்தானா கதவைத் திறந்துள்ளார். அப்போது பர்தா அணிந்து வந்த மர்ம நபர் சுல்தானாவை கத்தியை காட்டியுள்ளார். இதில் பயந்து போன சுல்தானா மற்றும் அவரது மகள் வீட்டில் இருந்த ஒரு அறைக்கு சென்று கதவை தாழ்ப்பாள் போடுக்கொண்டனர்.
பின்னர் மர்ம நபர் பக்கத்து அறையில் இருந்த பீரோவை உடைத்து அதிலிருந்து 40 சவரன் தங்க நகை மற்றும் ஐந்து லட்சம் ரொக்கத்தை கொள்ளையடித்துக் சென்றுள்ளார்.
தகவலின் பேரில் நகர போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அங்குள்ள சிசி டிவி பதிவு காட்சிகளை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டு வந்தனர்.
மேலும் சம்பவ இடத்திற்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சியாமளா தேவி நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார்.

போலீஸார் நடத்திய விசாரணையில் வீட்டின் உரிமையாளர் முபாரக் பாஷாவின் மனைவி சுல்தானாயிடம் அவரது தங்கை கணவரான தன்வீர் அஹமத் அடிக்கடி சென்று தான் அதிக அளவு கடனில் முழுகி உள்ளதாகவும், பணத்தை கொடுத்து உதவி செய்ய வேண்டும் என்று வற்புறுத்தி வந்ததாக தெரிய வந்தது.
சந்தேகத்தின் அடிப்படையில் உறவினரான தன்வீர் அஹமத் என்பவரை போலீஸார் காவல் நிலையத்திற்கு அழைத்து சென்று
நடத்திய தீவிர விசாரணையில் அவர் பர்தா அணிந்து கொள்ளை சம்பவத்தில் ஈடுப்பட்டது ஒப்புக்கொண்டுள்ளார்.
இதனை தொடர்ந்து போலீஸார் அவரை கைது செய்து அவரிடம் இருந்த 19 சவரன் தங்க நகையை பறிமுதல் செய்து அவரை நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.
குற்றவாளியை 5 நாட்களுக்குள் பிடித்த காவலர்களுக்கு ஆம்பூர் துணை காவல் கண்காணிப்பாளர் ரமேஷ் பாராட்டினார்.
