உடுமலை பாபுகான் வீதியில் போலீஸ் துணை சூப்பிரண்டு அலுவலகம் உள்ளது.இதன் வளாகத்தில் அனைத்து மகளிர் காவல் நிலையம் செயல்பட்டு வருகிறது.அத்துடன் போலீசார் பயன்பெறும் வகையில் கடந்த 2012-ம் ஆண்டு போலீசாருக்கு குடியிருப்புகள் கட்டப்பட்டது.இதில் இன்ஸ்பெக்டர், சப்-இன்ஸ்பெக்டர், போலீசாருக்கு என தனித்தனியாக 78 குடியிருப்புகள் உள்ளது. இந்த கட்டிடங்கள் நீண்ட கால பயன்பாடு மற்றும் போதிய பராமரிப்பின்மை காரணமாக சேதம் அடைந்து வருகிறது.அவற்றை சீரமைப்பதற்கு நடவடிக்கை எடுக்கவில்லை.இதனால் கட்டிடத்தின் பாதுகாப்பும் கேள்விக்குறியாகும் சூழ்நிலை ஏற்பட்டு உள்ளது.
அதுமட்டுமின்றி குடியிருப்புகளில் இருந்து வெளியேறும் கழிவு நீரை கொண்டு செல்லும் கால்வாயும் சேதம் அடைந்து தண்ணீர் தேங்கி வருகிறது.இதனால் துர்நாற்றம் ஏற்பட்டு சுகாதார சீர்கேடு நிலவி வருகிறது. மேலும் வளாகம் புதர் மண்டியும் நடை பாதையும் சேதம் அடைந்து விட்டது.இதன் காரணமாக கொசுக்கள் உற்பத்தியும் விசஜந்துக்களின் நடமாட்டாமும் இருந்து வருகிறது.
இது குறித்து சமூக ஆர்வலர்கள் கூறுகையில், எல்லையில் ராணுவத்தினர் நாட்டை காக்கின்றனர் என்றால் உள்ளூரில் நடைபெறும் சமூக விரோதிகள் செயல்களை தடுத்து பொதுமக்களுக்கு பாதுகாப்பான வாழ்வை அளிப்பதில் போலீசாரின் பங்கு முக்கியமானதாகும்.இவர்கள் பயன்பெறும் வகையில் கட்டப்பட்ட குடியிருப்புகள் பராமரிப்பு இல்லாமல் சேதம் அடைந்து வருவது வேதனை அளிக்கிறது. எனவே குடியிருப்புகள் முழுமையாக சேதம் அடையும் முன்பு சீரமைப்பதற்கு முன் வர வேண்டும்.அத்துடன் போலீசாரின் குழந்தைகள் விளையாடுவதற்கு எதுவாக விளையாட்டு உபகரணங்களை கூடுதலாக அமைக்க வேண்டும்.மேலும் சுகாதாரமான குடிநீர் கிடைக்கும் வகையில் தொட்டிகளிலும் தூய்மை பணி மேற்கொள்ள வேண்டும் என்று தெரிவித்தனர்.
உடுமலை : நிருபர் : மணி