Headlines

பாஜகவின் நிழல் ஆட்சியா தவெக ஆட்சி? – அமைதியின் பின்னணியில் இருக்கும் அரசியல் கணக்குகள்!

பாஜகவின் நிழல் ஆட்சியா தவெக ஆட்சி? - அமைதியின் பின்னணியில் இருக்கும் அரசியல் கணக்குகள்!

தமிழக அரசியல் களத்தில் மிகப்பெரிய புயலை ஏற்படுத்தி ஆட்சிக் கட்டிலில் அமர்ந்துள்ள தவெக அரசு, ஆட்சிப் பொறுப்பேற்றது முதல் இன்று வரை பல்வேறு விமர்சனங்களைச் சந்தித்து வருகிறது. “புதிய மாற்றம் வரும், தொழில்துறை செழிக்கும்” என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், தவெக அரசு தனது செயல்பாடுகளில் வேகம் காட்டாமல் கோட்டை விட்டு வருவதாக அரசியல் விமர்சகர்கள் அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை முன்வைக்கின்றனர்.

தமிழகத்தின் பொருளாதார வளர்ச்சிக்கும், இளைஞர்களின் வேலைவாய்ப்பிற்கும் மிக முக்கியமானது புதிய தொழில் முதலீடுகள். ஆனால், தவெக ஆட்சி அமைந்ததில் இருந்து பெரிய அளவிலான தொழில் திட்டங்களைக் கொண்டுவருவதில் எந்தவிதமான ஆக்கபூர்வமான நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்கிற ஆதங்கம் தொழில்முனைவோரிடையே எழுந்துள்ளது.

அண்டை மாநிலங்கள் புதிய தொழில் முதலீடுகளை ஈர்ப்பதில் அதிவேகம் காட்டி வரும் நிலையில், தமிழக அரசு இந்த விஷயத்தில் மௌனம் காப்பது மாநிலத்தின் எதிர்கால வளர்ச்சியை முடக்கும் நிலைக்குத் தள்ளியிருக்கிறது. “அறிவிப்புகள் மட்டுமே வருகின்றன; செயல்பாட்டில் எதுவும் நகரவில்லை” என்பதே நடுநிலையாளர்களின் கருத்தாக இருக்கிறது. அத்துடன் சமீபத்தில் திண்டுக்கல் மாவட்டம் பழனி தண்டாயுதபாணி சுவாமி திருக்கோவில் அறக்கட்டளைக்குச் சொந்தமான, சுமார் ₹100 கோடி மதிப்பிலான 1.40 ஏக்கர் நிலம் முறைகேடாகப் பத்திரப்பதிவு செய்யப்பட்ட சம்பவம் தமிழகத்தையே உலுக்கியது.
பொதுவாக, கோவில் சொத்துகளில் சிறு பிரச்சனை என்றாலும் வீதிக்கு வந்து போராடும் அமைப்புகள் இந்த விஷயத்தில் காட்டிய மெத்தனப்போக்கு அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.

மதுரை திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் விளக்கு ஏற்ற வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு விவகாரங்களுக்காகத் தொடர் போராட்டங்களையும், கண்டன ஆர்ப்பாட்டங்களையும் நடத்தி தமிழக அரசியலையே பரபரப்பாக்கியது பாஜக மற்றும் அதன் ஆதரவு இந்து அமைப்புகள். ஆனால், பழனி கோவில் நில விவகாரத்தில் இந்து முன்னணி, பாஜக, இந்து மக்கள் கட்சி போன்ற அமைப்புகள் வெறும் கடமைக்காகப் பெயரளவில் ஒரு கண்டன அறிக்கையோடு அமைதியாகிவிட்டன.

“திமுக ஆட்சியில் சிறு விஷயம் என்றாலும் ‘இந்து விரோத அரசு’ என முத்திரை குத்திய அமைப்புகள், ₹100 கோடி கோவில் நில முறைகேடு நடந்த பிறகும் ஏன் தீவிரப் போராட்டத்தில் இறங்கவில்லை?” என்ற கேள்வி எழுந்துள்ளது. மத்திய பாஜக அரசின் கொள்கைகளுக்கோ அல்லது மாநில உரிமைகள் பறிக்கப்படும் போதோ தவெக தலைமை எந்தவிதக் காட்டமான எதிர்வினையையும் ஆற்றாமல் அமைதி காத்து வருகிறது.

மத்திய அரசுக்கு எதிராகக் குரல் கொடுக்கத் தயங்குவது, பாஜக ஆதரவு அமைப்புகளின் மென்மையான அணுகுமுறை ஆகியவற்றை இணைத்துப் பார்க்கும் அரசியல் ஆய்வாளர்கள், “தமிழகத்தில் தவெக ஆட்சியைத் தங்களது மறைமுக ஆதரவு ஆட்சியாகப் பயன்படுத்தி, பாஜக தனது நிழல் ஆட்சியைச் நடத்தி வருகிறதோ?” என்ற சந்தேகத்தை வெளிப்படையாகவே எழுப்புகின்றனர். மக்கள் எதிர்பார்ப்புகளுடன் வந்த புதிய அரசு, தொழில்துறை வளர்ச்சியை மீட்டெடுக்குமா அல்லது மத்திய பாஜக அரசின் நிழலாகவே இயங்குமா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்!

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *