கன்னியாகுமரி மாவட்டக் காவல் கண்காணிப்பாளராக ஸ்டாலின் பொறுப்பேற்றதில் இருந்தே, அங்கு சட்டவிரோதக் கும்பல்களின் பிடி தளரத் தொடங்கியுள்ளது. குறிப்பாக, குமரி மாவட்டத்தையே உலுக்கிக் கொண்டிருந்த டாரஸ் லாரி கனிமவளக் கடத்தல் மற்றும் மது மாஃபியாக்களுக்கு எதிராக அவர் எடுத்த ‘அதிரடி’ நடவடிக்கைகள், மாஃபியா கும்பலை அலறவிட்டுள்ளன. இந்த நிலையில், எஸ்பி ஸ்டாலின் மீது பாயும் தொடர் அவதூறுகள் குமரி மாவட்டத்தைக் கொதிக்க வைத்துள்ளன.
கனிமவளக் கடத்தலைத் தடுத்து நிறுத்தியதால் ஆத்திரமடைந்த மாஃபியா கும்பல், நேரடியாக மோதிப் பார்க்க முடியாமல், பின்னணியில் இருந்து கொண்டு சில நச்சுப் பிரச்சாரங்களை ஏவி விட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. இதன் உச்சகட்டமாக, யூடியூபர் சவுக்கு சங்கர் எஸ்பி ஸ்டாலின் மீது அள்ளி வீசியுள்ள தனிப்பட்ட அவதூறுகள், சமூக வலைதளங்களில் புயலைக் கிளப்பியுள்ளன.
பெண்களைத் தொடர்புபடுத்தி, ஏதோ சம்பவத்தை நேரில் பார்த்தது போல் சவுக்கு சங்கர் பேசியிருக்கும் பாணி, காவல்துறை வட்டாரத்திலேயே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. “ஆதாரமற்ற கதைகளை அள்ளித் தெளிப்பதில் கைதேர்ந்த சவுக்கு சங்கர், இப்போது ஒரு நேர்மையான அதிகாரியின் நேர்மையைக் குலைக்கப் பார்க்கிறார்” எனச் சமூக ஆர்வலர்கள் கொந்தளிக்கிறார்கள்.
மாவட்டத்தின் சட்டம்-ஒழுங்கைப் பராமரிப்பது மட்டுமல்லாமல், பள்ளியை விட்டு இடைநின்ற மாணவர்களைத் தேடிக் கண்டுபிடித்து மீண்டும் கல்வி பயில வைப்பது, கல்லூரி மாணவர்களிடையே போதைப்பொருள் விழிப்புணர்வு ஏற்படுத்துவது, பெண்களுக்கு எதிரான குற்றங்களைத் தடுப்பது என மக்களுடன் நின்ற ஒரு அதிகாரி மீது, போகிற போக்கில் சேற்றை வாரியிறைப்பது எந்த வகையில் நியாயம் என்ற கேள்வி எழுந்துள்ளது.
இதுகுறித்து நம்மிடம் பேசிய சமூக செயல்பாட்டாளர்கள் சிலர், “டாரஸ் மற்றும் மது மாஃபியாக்களின் தூண்டுதலால் தான் சவுக்கு சங்கர் இப்படிப் பேசுகிறாரா? எந்த ஆதாரத்தின் அடிப்படையில் இந்த அவதூறை வெளியிட்டார்? இதன் பின்னணியில் உள்ள ‘பெரிய தலைகள்’ யார்? இதனால் அவருக்கு கிடைத்த லாபம் என்ன?” எனக் கேள்வி மேல் கேள்வி கணைகளைத் தொடுக்கின்றனர்.
“நேர்மையாகச் செயல்படும் அதிகாரிகளின் மன உறுதியைக் குலைக்கும் வகையில் செயல்படும் சவுக்கு சங்கரை உடனே விசாரணைக்கு உட்படுத்த வேண்டும். முதல்வர் மு.க.ஸ்டாலின் மற்றும் காவலத்துறை உயர் அதிகாரிகள் இதில் உடனடியாகத் தலையிட்டு, இந்த அவதூறுப் பிரச்சாரத்தின் பின்னணியில் உள்ள மாஃபியா கும்பலை வெளிச்சத்திற்குக் கொண்டு வர வேண்டும்” என்பதே குமரி மக்களின் தற்போதைய கோரிக்கையாக உள்ளது.
அவதூறுகளுக்குப் பின்னால் இருக்கும் ‘டாரஸ்’ மாஃபியாக்களை காவல்துறை தட்டித் தூக்குமா… அல்லது சவுக்கு சங்கருக்கு சம்மன் அனுப்புமா? தமிழ்நாடு காவல்துறை நடவடிக்கை தான் என்ன? என்பதை பாக்கலாம்..
