ஏழை, எளிய மற்றும் நடுத்தர மக்கள் குறைந்த விலையில் கிடைக்கும் உணவுகளை நம்பியே தங்களது அன்றாட வாழ்க்கையை நடத்துகின்றனர். அவர்களுக்கு வழங்கப்படும் உணவு பாதுகாப்பானதாகவும், தரமானதாகவும், சரியான எடையுடனும் இருக்க வேண்டியது மிகவும் அவசியமாகும்.
ஆனால், சமீபகாலமாகப் பல்வேறு உணவகங்களில் அனுமதிக்கப்படாத சமையல் பொருட்கள் மற்றும் செயற்கை நிறமிகள் பயன்படுத்தப்படுவதாகப் புகார்கள் எழுந்த வண்ணம் உள்ளன. இவற்றை அறிவியல் பூர்வமாகப் பரிசோதித்து, உணவு பாதுகாப்பு விதிமுறைகளை மீறுபவர்கள் மீது உணவு பாதுகாப்புத் துறை கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் வலியுறுத்துகின்றனர். “உணவே மருந்து” என்ற நிலை மீண்டும் உருவாக வேண்டும் என்றும், உணவு மக்களின் உடல்நலத்தைக் காக்க வேண்டுமே தவிர, நோய்க்குக் காரணமாக மாறக்கூடாது என்பதும் அனைவரின் விருப்பமாக உள்ளது.
சிறப்பாக, திண்டுக்கல் மாவட்டத்தில் செயல்படும் உணவு பாதுகாப்புத் துறை நியமன அலுவலர் மற்றும் மாவட்ட உணவு பாதுகாப்பு அலுவலர்கள், பொதுமக்களின் புகார்களை உடனடியாகக் கருத்தில் கொள்ள வேண்டும். குறிப்பாகச் சாலையோர உணவகங்கள் மற்றும் இரவு நேர ஃபாஸ்ட் ஃபுட் கடைகளில் தொடர் ஆய்வுகளை மேற்கொண்டு, உணவின் தரம், பயன்படுத்தப்படும் மூலப்பொருட்கள், செயற்கை நிறமிகள், சுவையூட்டிகள், மீண்டும் மீண்டும் பயன்படுத்தப்படும் சமையல் எண்ணெய் மற்றும் உணவின் எடை ஆகிய அனைத்தையும் முறையாகக் கண்காணிக்க வேண்டும் என்பதே மாவட்ட மக்களின் பிரதான எதிர்பார்ப்பாக உள்ளது.
மாவட்ட ஆட்சியர் மற்றும் மாவட்ட உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் இணைந்து தீவிரக் கண்காணிப்புப் பணிகளை மேற்கொண்டு, தவறு செய்வோர் மீது சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை வலுத்து வருகிறது. இந்த மாற்றம் திண்டுக்கல் மாவட்டத்தில் எப்போது வரும்? உணவுப் பாதுகாப்புத் துறை தீவிரமாகச் செயல்பட்டு, பொதுமக்களின் நல்வாழ்வைப் பாதுகாக்குமா?
பொறுத்திருந்து பார்ப்போம்…
இணை ஆசிரியர் : நா.ராஜாமணி – 8973350663
