Headlines

குடிபோதையில் விவசாயியைத் தாக்கிய நபர் கைது.!

குடிபோதையில் விவசாயியைத் தாக்கிய நபர் கைது.!

மடத்துக்குளம் அருகே குத்தகைத் தோட்டத்தில் விவசாயம் செய்து வந்த நபரை, குடிபோதையில் தகராறு செய்து தாக்கிய நபரை கணியூர் காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

இதுகுறித்து காவல் துறை தரப்பில் தெரிவிக்கப்படுவதாவது:
கணியூர் காவல்நிலைய எல்லையை ஒட்டியுள்ள காரத்தொழுவு முள்ளங்கி வலசு பகுதியைச் சேர்ந்தவர் கருணாகரன் (55), இவர் அப்பகுதியில் உள்ள ஒரு தோட்டத்தைக் குத்தகைக்கு எடுத்து விவசாயம் செய்து வருகிறார்.

இவரது தோட்டத்திற்கு அருகே அதே பகுதியைச் சேர்ந்த பொன்னுச்சாமி (45), என்பவர் விவசாயம் செய்து வருகிறார். கருணாகரன் தோட்டத்தில் விவசாயம் செய்வது பொன்னுச்சாமிக்குப் பிடிக்கவில்லை எனக் கூறப்படுகிறது. இதனால், அவர் அடிக்கடி குடிபோதையில் வந்து கருணாகரனிடம் தகராறில் ஈடுபட்டு வந்துள்ளார்.

இந்நிலையில், சம்பவத்தன்று தோட்டத்தில் நின்று கொண்டிருந்த கருணாகரனிடம் வந்த பொன்னுச்சாமி, தகாத வார்த்தைகளால் பேசி தகராறு செய்துள்ளார். மேலும், ஆத்திரமடைந்த பொன்னுச்சாமி, கருணாகரனைக் கையால் தாக்கி கீழே தள்ளியுள்ளார். இதில் நிலைகுலைந்து கீழே விழுந்த கருணாகரனுக்குத் தலையில் லேசான சிராய்ப்பு காயமும், இடது கண்ணில் ரத்தக் கட்டும் ஏற்பட்டது.

இதனையடுத்து, காயமடைந்த கருணாகரன் சிகிச்சைக்காக உடுமலை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதுகுறித்து அளிக்கப்பட்ட புகாரின் பேரில், கணியூர் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். அதனை தொடர்ந்து, பொன்னுச்சாமியைக் கைது செய்த காவல்துறையினர், அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *